பிரதோஷத்தில் அவதரித்த நரசிம்மர்!


ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

பிரதோஷத்தில் சிவபெருமானுக்குத்தான் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன என நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிரதோஷத்தின் போது, நரசிம்மருக்கும் விசேஷ பூஜைகள் ஆராதனைகள் நடைபெறுகின்றன. எனவே, பிரதோஷத்தின் போது, சைவக்கோயிலுக்குச் சென்று சிவனாரையும் வைஷ்ணவக் கோயிலுக்குச் சென்று நரசிம்மரையும் தரிசிப்பது சிறப்பு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. அதேபோல், எடுத்த அவதாரங்களிலேயே மிகக்குறைவான நேரத்துக்குள் அவதாரத்தை எடுத்து உடனேயே அவதாரம் முடிந்ததும் நரசிம்ம அவதாரம்தான்.

‘பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில் எனக்கு மரணம் நிகழவேண்டும். மனிதனாகவும் இல்லாத, மிருகமாகவும் இல்லாதவரே என்னைக் கொல்லவேண்டும்’ என்றெல்லாம் கேட்டு வரங்கள் பெற்றவன் இரணியன். அதனால் மனித உடலுடன் சிங்க முகத்துடன் அவதரித்தார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். அதேபோல், பகலும் இல்லாத இரவும் இல்லாத அந்திப்பொழுதில் அவதரித்தார் நரசிம்மர் என்றும் அதுவொரு திரயோதசி திதி நாளில் நிகழ்ந்தது என்றும் விவரிக்கிறது அபிதான சிந்தாமணி. பிரகலாதனுக்காக, இரணியனை அழித்த நரசிம்மர், கடும் உக்கிரத்துடன் இருந்தார். நரசிம்மரை, சிவபெருமான், ஒரு சரபப்பறவையாக வந்து தணித்தார். அந்த வடிவத்தையே சரபேஸ்வரர் என்று வணங்கி வருகிறோம். சரபேஸ்வரர் குறித்த விஷயங்களும் நரசிம்மர் குறித்த விஷயங்களும் அபிதான சிந்தாமணியில் முழுவதுமாக விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஆந்திரம் முதலான பல மாநிலங்களிலும் நரசிம்மருக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நாமக்கல், மதுரை ஒத்தக்கடை நரசிங்கம், செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி உள்ளிட்ட பல தலங்களில் நரசிம்மர் சந்நிதிகள் குகைக் கோயில்களாகவும் குடைவரைக் கோயில்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தைச் சுற்றிலும் மூன்று நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள்.

சோளிங்கர் திருத்தலத்தை சோழசிங்கபுரம் என்றும் விவரிக்கிறது வரலாறு. சோளிங்கர் திருத்தலத்தில், மிகப்பிரம்மாண்டமான மலையின் மீது கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார் நரசிங்கப் பெருமாள்.

நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்வது ஒரு பிரதோஷ காலத்தில்தான் என்கிறது நரசிம்ம புராணம். எனவே, சிவாலயத்தில் பிரதோஷம் என்பது வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது போல், நரசிம்மரையும் பிரதோஷ காலத்தில் தரிசிப்பது ரொம்பவே விசேஷமானது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இன்று அக்டோபர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷம். பிரதோஷத்தின் போது அருகிலுள்ள நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்கோ அல்லது பெருமாள் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் நரசிங்கப் பெருமாளையோ தரிசித்து வழிபடுங்கள். குறிப்பாக, பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் நரசிங்க பெருமாளை தரிசியுங்கள். ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கு, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். தயிர் சாதம் நைவேத்தியமாக வழங்குவதும் பானக நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும் எதிர்ப்புகளை செயலிழக்கச் செய்யும். எதிரிகளின் பலம் குறையும். பகையை அழித்து, நம் பாவங்களைப் போக்கி அருளுவார் நரசிம்ம மூர்த்தி!

x