விடியல் தரும் வெள்ளி பிரதோஷம்!


பிரதோஷ பூஜை

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவாலயத்துக்குச் சென்று சிவபெருமானையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். நம் வாழ்வில் இதுவரையிலான தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் நந்தியெம்பெருமான். சிந்தனையில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கொடுப்பார் ஈசன்!

சிவ வழிபாடுகளில் மாத சிவராத்திரி வழிபாடு மிக முக்கியம். அதேபோல், திருவாதிரை நட்சத்திர நாளில், சிவன் கோயிலுக்குச் செல்வதும் சிவபுராணம் பாராயணம் செய்வதும் நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக திரயோதசி திதி நாளான பிரதோஷ தினத்தில், அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தாலே நம் வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவன் கோயில்களில், பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் 16 வகை அபிஷேகங்களும் நடைபெறும். எல்லா நாட்களிலும் சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் பிரதோஷ நன்னாளில், நந்திதேவருக்கும் நடைபெறும்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த வேளையில்தான் சிவன் கோயில்கள் அனைத்திலும் பிரதோஷ பூஜையானது சிறப்புற நடைபெறும். அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிர், தேன், அரிசி மாவு, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், விபூதி என நம்மால் முடிந்த பொருட்களை வழங்கி, நந்தியம்பெருமானையும் சிவபெருமானையும் வணங்குவது வளமும் நலமும் சேர்க்கும்.

சிவனாருக்கு உகந்தது வில்வம். அதேபோல் நந்திதேவருக்கு உகந்தது அருகம்புல். எனவே, சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தியும் நந்திக்கு அருகம்புல் சார்த்தியும் வழிபட்டால், நம்முடைய துக்கங்களையும் கவலைகளையும் போக்கியருளுவார் நந்திதேவர். ஞானத்தையும் யோகத்தையும் காரியத்தில் தெளிவையும் தந்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

இன்று அக்டோபர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை பிரதோஷமும் சனிப் பிரதோஷமும் மகிமை மிக்கது போல், வெள்ளிக்கிழமை அன்று வருகிற பிரதோஷமும் மிக மிக முக்கியமானது. ஆகவே, இன்று சிவ தரிசனம் செய்யவும் நந்திதேவரை ஆராதிக்கவும் மறந்துவிடாதீர்கள்.

x