பிணி என்றால் நோய். இந்த நோய்ப் பட்டியலில் எதையெதையெல்லாமோ சேர்த்துச் சொல்கிறோம். பட்டியலிட்டிருக்கிறோம். ஆனால், உலகில் எவருக்குமே தோன்றாததோரு விஷயத்தை, இந்தப் பட்டியலில் சேர்த்து, ‘இதுவும் நோய்தான்’ என்று பசியை நோய்க்குள் கொண்டுவந்தார். பசிப்பிணி என்று சொன்னார். தானம்தானமாக வாங்கி, அடுப்பைப் பற்றவைத்தார். உணவு சமைத்தார். இன்றைக்கும் அங்கே உணவு பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வருவோரின் பசியைப் போக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்... வள்ளலார். அருட்பிரகாச வள்ளலார்.
திருவருட் பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 1823 அக்டோபர் 5-ம் நாள் பிறந்தார். ஆன்மிக நெறியுடன் வாழ்ந்து, அதை மக்களுக்குப் போதித்தவர்தான் வள்ளலார். ஆனால், எது ஆன்மிகம் என்பதை, எது தெய்வம் என்பதை உணர்த்தியதில்தான் வள்ளலார் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராகத் திகழ்கிறார்.
சமத்துவம் எனும் விஷயத்தை கம்யூனிஸம் சொல்கிறது. வள்ளலார் தன் பிரார்த்தனையின் வாயிலாகவும் போதனைகளின் மூலமாகவும் ‘எல்லோரும் இன்புற்று வாழ்க’ என சமத்துவ மகத்துவத்தையும் இன்பத்துடன் வாழ்தலின் பேரானந்தத்தையும் நமக்குப் போதித்துச் சென்ற வித்தியாசமான ஞானி. ஆன்மிக ஞானி. ஆத்ம ஞானி.
’உன்னை நினைப்பவர்கள் வேண்டும்’ என்று வள்ளலார் சொல்லவில்லை. நன்றாகப் பேசுபவர்கள் உறவு வேண்டும் என்று போதிக்கவில்லை. ’ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று நமக்கெல்லாம் அருளிய வள்ளலார், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்தார். அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைமக்களுக்கு போதித்தார்.
நெய்வேலி அருகே இருக்கிறது வடலூர். இங்கே, அவர் உருவாக்கி சத்திய ஞானசபை இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைச் சொல்லும் விதமாக, தான் செல்லும் மார்க்கத்துக்கு சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். அத்துடன் நின்றுவிடாமல், சத்திய ஞானசபையை அமைத்தார்.
முன்னதாக, இவரின் கொள்கையாலும் அறத்தாலும் இவரின் கருத்துகளாலும் இவரின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டே வந்தார்கள். 1867-ம் ஆண்டு வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று சத்திய தருமசாலையைத் தொடங்கினார் வள்ளலார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட தருமசாலையில் மூன்று வேளையும் உணவு வழங்கச் செய்தார்.
சாதிய பாகுபாடுகளைச் சாடிய வள்ளலாரை, உயர் ஜாதியினர் தவறாகப் புரிந்துகொண்டனர். அதனால் இவரையும் இவரின் கொள்கைகளையும் எதிர்த்தார்கள். ‘இதென்ன முற்போக்குத்தனமாக இருக்கிறதே...’ என்றெல்லாம் ஏகடியம் பேசினார்கள். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டன. ஆனால், இப்போது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்தகொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு லட்சக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகின்றன.
’’இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி நிலையில் அடக்கம் செய்விக்க வேண்டும்’’ என்றார் வள்ளலார். ’’எதிலும் பொது நலனே முக்கியம். எந்த உயிரையும் கொல்லக்கூடாது, எல்லா உயிர்களும் நமக்கு உறவுகள்தான்’’ என்றார். “எந்தவொரு உயிரினத்தையும் எவரும் துன்புறுத்தக் கூடாது’’ என்றும் அருளினார். ’’பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடுகள் இல்லை. அப்படியெல்லாம் வேறுபாடுகள் பார்க்காமல் உணவளிக்க வேண்டும்’’ என்றார். ’’புலால் உணவை தவிர்ப்பது நல்லது’’ என்றார். ’’கடவுள் ஒருவரே! அவருக்கு ரூபங்களில்லை. கடவுள் ஜோதி வடிவானவர். ஜோதியே கடவுள். கடவுளே ஜோதி. அருட்பெருஞ் ஜோதிதான் கடவுள்’’ என அருளினார். ’’மத வெறி கூடவே கூடாது’’ என்றார். இப்படியாக நமக்கு வள்ளலார் உணர்த்திச் சென்ற அறநெறித் தத்துவங்கள் ஆயிரமாயிரம்!
‘இறைவன் ஒளிமயமானவன்’ என்பதை வெளிச்சமிட்டு உலகுக்கு உணர்த்திய வள்ளலார், ‘ஒளியை அனைவரும் வணங்க வேண்டும்’ என்று வலியுறுத்திய வள்ளலார், நமக்கு ‘திருவருட்பா’வை அருளியுள்ளார். அவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு ‘திருவருட்பா’ என்றழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
‘கருணை இல்லாத இடத்தில் இறைவன் இருக்கவே மாட்டார். அங்கே ஒற்றுமையும் இருக்காது. பேதங்கள் உருவாகி சண்டைகளே தோன்றும்’ என்பது வள்ளலார் அருளிச்சென்ற வாக்கு. ‘உயிர்க் குலம் அனைத்துக்கும் தெய்வம் ஒன்றுதான். அப்படியான நம்பிக்கைதான் மனிதர்களை ஒருமுகப்படுத்தும். ஒன்றுசேரவைக்கும். அவர்களை சத்திய வழியில் செயல்பட வைக்கும். அவர்களுடைய ஆணவத்தைத் தடுக்கும். மக்களுக்கு அடக்கத்தை அளிக்கும். அந்த ஒரே தெய்வத்தைப் புரிந்துகொண்டு பின் ’ஞானஒளி’ வடிவில் இறைவனை வழிபடுவதே சிறந்தது’ என்றார்.
வள்ளலார் எளிமையாக வாழ்ந்தவர். அவரின் கருத்துகளும் எளிமையாக மக்களிடம் சென்றடைந்தன. ’ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜபம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்காது. அவர்களை ஆன்ம விளக்கம் அறிந்தவர்களாக நினைக்க முடியாது. ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படும் செயல்பாடுகள் அனைத்துமே பயனற்ற மாயாஜாலச் செயல்கள்தான்’ என்பதை, மக்களிடத்தில் தனது ’சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ மூலம் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார் வள்ளலார்.
சாதி, சமய, வருண பேதங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒற்றுமையுடன் இருங்கள். ஆன்ம நேயத்தைக் கடைப்பிடியுங்கள். அமைதி வழியில் செல்லுங்கள். பிரிவினை வாதங்களில் சிக்கிக் கொள்ளாமல், அமைதி வழியில் ஒற்றுமையாக இருப்பதுதான், அன்புமயமான உலகிற்கான வழி என தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார் வள்ளலார்.
‘அறம் மரமானால் அதன் வேர் கருணை ஆகும்’ என்று கூறிய வள்ளலார் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் கருணையின் அடிப்படையில் அமைய வேண்டும் என நமக்கு வலியுறுத்திச் சென்றார்.
ஒருமுறை வள்ளலாரிடம் அவருடன் இருந்தவர்கள், ‘‘இளம் தலைமுறையினருக்கு தாங்கள் கூற விரும்பும் அறநெறி கருத்துகள் என்ன?’’ என்று கேட்டனர்.
அதற்கு வள்ளலார் இப்படிச் சொன்னார்...
’‘இளைஞர்களே! நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர்கள். தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதீர்கள்.மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதீர்கள். ஏழைகள் வயிறு எரியச் செய்யாதீர்கள். பொருளை இச்சித்து பொய் சொல்லாதீர்கள். பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதீர்கள். உங்களிடம் இரப்போர்க்கு பிச்சை இல்லை என்று சொல்லாதீர்கள். குருவை வணங்கக் கூசி நிற்காதீர்கள். வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சங்களை அழிக்காதீர்கள். தந்தை - தாய் மொழியைத் தள்ளி நடக்காதீர்கள்” என்றார் வள்ளலார். அவர் சொன்ன பொன்மொழிகள் காலத்துக்கும் கடைபிடிக்கவேண்டிய தேன் மொழிகள்!
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என உருகிய வள்ளலாரின் வாழ்வும் அவரின் கொள்கைகளும் நல்வாழ்வுக்கான போதனைகள். ஜீவகாருண்யமே ஒழுக்கம், அன்னதானமே பக்தி என்று வாழ்ந்த அற்புத மகான்!
1823 அக்டோபர் 5-ம் தேதி அவதரித்தார் வள்ளலார். 3.1.1874 அன்று ஜீவ சமாதியானார். அவர் ஏற்றிவைத்த ஜோதி, அருட்பெருஞ்ஜோதியாக அக இருளை அகற்றி ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று அவரின் 200-வது அவதாரத் திருநாளிலும் ஆன்மிகத்தையும் அன்பையும் கருணையையும் அன்னதானப் பண்பையும் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!