புரட்டாசி; புதன்; மகா திருவோணம்!


புரட்டாசி மாதத்தின் திருவோண நட்சத்திர நாளில், புதன் கிழமை நன்னாளில் பெருமாளை வழிபடுவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வேங்கடவனைத் தொழுவோம். நம் வேதனைகளையெல்லாம் தீர்த்தருளுவான் ஸ்ரீமந் நாராயணன்.

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம். தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது எப்படி பெருமாளுக்கு உரிய மாதமாக, பெருமாள் வழிபாட்டுக்கு உரிய மாதமாகத் திகழ்கிறதோ அதேபோல, புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது.

அதேபோல், புதன்கிழமை என்பது பெருமாள் வழிபாட்டுக்கான நாள். திருமாலை வழிபடுவதற்கும் பூஜைகள் மேற்கொள்வதற்குமான நன்னாள். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று புதன்கிழமையைப் பெருமையாகச் சொல்லுவார்கள். புதன்கிழமை நாளில், பொதுவாகவே பெருமாள் கோயிலுக்குச் செல்வதும் வழிபடுவதும் மிகுந்த விசேஷமானது என்பார்கள் ஆச்சார்யர்கள்.

நட்சத்திரங்களில், பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாக, மகாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரமாக திருவோணம் சொல்லப்படுகிறது. எனவே மாதந்தோறும் வருகிற திருவோண நட்சத்திர நாளில், வேங்கடவனை வழிபடுவது நற்பலன்கள் பலவற்றை வழங்கும் என்பது ஐதீகம்.

அதிலும் புரட்டாசி மாதத்தில் வருகிற திருவோண நட்சத்திர நாளை, மகா திருவோணம் என்றே சொல்லிப் புகழ்கிறது புராணம். எனவே, புரட்டாசி மாதமும் புரட்டாசி புதன்கிழமையில் திருவோணமும் அதுவும் குறிப்பாக, மகா திருவோணமும் கூடியிருக்கும் நாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். மாலை வேளையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்வோம்.

புரட்டாசி மகா திருவோண நாளில் (அக்டோபர் 5ம் தேதி), பெருமாளையும் மகாலக்ஷ்மியையும் வணங்கி வழிபட்டால், நம் வேதனைகளையெல்லாம் போக்கியருளுவான் வேங்கடவன். சங்கடங்களையெல்லாம் தீர்த்தருளுவான் ஸ்ரீசக்கரநாயகன்.

x