ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம்!


பிரம்மோற்சவத்தின் பாகமாக இன்று 28ம் தேதி புதன்கிழமை மாலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ரங்கநாயக மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்ததாகப் பக்தர்கள் சிலிர்க்கின்றனர்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று (28ம் தேதி செவ்வாய்க்கிழமை) காலை உற்சவரான மலையப்ப சுவாமி, சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி பிரம்மோத்சவம்

இந்தநிலையில், இன்று மாலை கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில், சென்னை மலர் அலங்கார நிபுணர் குழுவினர், 4 நாட்களாக இந்த ரங்கநாயக மண்டபத்தை சுமார் ஒரு டன் மலர்களால் அலங்கரித்தனர். திருமஞ்சன மேடையும், மேற்கூரையும் விதவிதமான மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிப்பட்டிருந்தன.

இதில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் முடிந்ததும், பல வெளிநாட்டு பழங்களால் மலர் மாலைகள் மற்றும் கிரீடங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டது. இவையெல்லாம் தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பின்னர் நைவேத்தியம் படைக்கப்பட்டபோது, பக்தர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். நைவேத்தியத்துக்கு வைத்திருந்த பழங்கள் அனைத்தும் வெளிநாட்டுப் பழங்களாகும்.

ஜப்பானிலிருந்து ஆப்பிள், மஸ்கட்டிலிருந்து திராட்சை, கொரியாவிலிருந்து பியர்ஸ் பழங்கள், தாய்லாந்திலிருந்து மாம்பழம், அமெரிக்காவிலிருந்து செர்ரி பழங்கள் முதலான பழங்களின் மூலம் உற்சவர்களுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்றிரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹம்ச வாகனத்தில் உற்சவரான மலையப்பர் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் பக்தர்கள் ‘ கோவிந்தா கோவிந்தா’ என பக்தி கோஷமிட்டு சுவாமியை தரிசித்தனர்.

x