திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டாம் நாள் பிரம்மோற்சவம் இன்று காலை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினர்.
இன்று காலையில் வாகன மண்டபத்தில் இருந்து வாகன சேவை தொடங்கியது. அப்போது நான்கு மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
வாகன சேவையின் போது குதிரை, காளை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஜீயர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். மேலும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடன குழுவினர் உற்சாகமாக நடனம் ஆடியபடி வாகன சேவைக்கு முன்னர் சென்றனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த வாகன சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.