திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!


திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்திப் பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோத்சவ விழாவானது, நேற்று 27ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலாகத் தொடங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் தொடர்பாக மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் கோலாகலமாக திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.

கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர். அப்போது அவர், வரும் 2023ம் ஆண்டுக்கான புதிய தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரியை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோத்சவத்தின் முதல் நாளில், நான்கு மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

x