மூன்று சக்தியையும் தரும் மூன்று தேவியர் வழிபாடு!


பெண்களை முன்னிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகைகளில், பெண்களே செய்யும் பண்டிகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரிப் பெருவிழா! மற்ற பண்டிகையோ விரதமோ ஒருநாளோ இரண்டுநாளோ அத்துடன் பூர்த்தியாகிவிடும். ஆனால், நவராத்திரி விழா மட்டும்தான் ஒன்பது நாள் விழாவாகவும் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே நவராத்திரி வைபவத்தின் ஐதீகம். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் ஒருங்கே பெறுவதற்கான ஒப்பற்ற வழிபாடு இது. இச்சை என்றால் விருப்பம், ஆசை, லட்சியம், குறிக்கோள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செயல்படுதல், காரியங்களில் ஈடுபடுதல் என்று பொருள். இந்த மூன்று விஷயங்களும் இருந்தால்தான், முழுமையான மனிதனாக செயலாற்றி, நமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை செவ்வனே வாழ்ந்து நிறைவு செய்யலாம் என்பது ஐதீகம். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்றையும் தருகிற சக்திகளாகத் திகழும் முப்பெருந்தேவியரை நம் வீட்டுக்கு அழைத்து வணங்கி வழிபடுவதுதான் நவராத்திரியின் தாத்பரியம். நவராத்திரி வைபவத்தின் சிறப்பு.

நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீதுர்கை, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த ஒன்பது நாட்களும் எவர் வீட்டில், உள்ளன்புடன், ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மனோபலமும் ஞானமும் பெருகும். அந்த வீட்டில் குடும்பத்தலைவருக்கு உத்தியோகத்தில் மேன்மையும் பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தைகள் கல்வி கலைகளில் சிறந்து திகழ்வார்கள். இல்லத்தில் ஐஸ்வர்ய கடாட்சம் குடிகொண்டிருக்கும்.

நவராத்திரியின் ஒன்பது நாளிலும் கொலு வைபவத்தைக் காண வருவோருக்கும் பலன்கள் உண்டு என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். அவர்கள் வீடுகளில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி குடிகொள்ளும். ஆனந்தம் என்றைக்கும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்!

x