குடை, உடை, போர்வை, உணவு தானம் கொடுங்களேன்!


மகாளய பட்ச அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து எவருக்கேனும் குடை வழங்கலாம். ஆடைகள் வாங்கிக் கொடுக்கலாம். போர்வை தரலாம். அன்னதானம் செய்யலாம். இவை எல்லாமே நம் முன்னோர்களுக்குப் போய்ச்சேரும். இந்தப் புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்பது ஐதீகம்.

வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்றெல்லாம் இருப்பது போலவே, முன்னோர் வழிபாடு என்பதும் இருக்கிறது. சொல்லப்போனால், முன்னோர் வழிபாட்டுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. முன்னோர் வழிபாடு என்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

அந்தக் காலங்களில், வீட்டில் இறந்துவிட்ட முன்னோர்களை வணங்கும் பொருட்டாகவும் அவர்களின் ஆத்மா அமைதி பெறுவதற்காகவும் அவர்களின் பெயரில் பள்ளிக்கூடம் கட்டுவார்கள். இலவச கல்வியை அந்த ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குவார்கள். கல்லூரிகள் கட்டினார்கள்.

‘அறக்கட்டளை’ நிறுவினார்கள். ‘அன்னச்சத்திரம்’ அமைத்து பசியுடன் வருவோருக்கெல்லாம் உணவு வழங்கினார்கள். ’தண்ணீர்ப்பந்தல்’ வைத்ததும் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்!

காலப்போக்கில், முன்னோர்களின் பெயர்களில் பள்ளி, கல்லூரி கட்டுவதும் அறக்கட்டளை அமைப்பதும் குறைந்துவிட்டன. ஆனாலும் எல்லோருக்குள்ளும் தானம் செய்கிற மனம் மட்டும் மாறாமல் இருக்கத்தான் செய்கிறது.

அமாவாசை முதலான நாட்களில், நம் முன்னோர்களை மனதில் நினைத்துக்கொண்டு, என்ன தானங்கள் செய்தாலும் அவை மிகுந்த பயனையும் பலத்தையும் நமக்கு வழங்கும் என அறிவுறுத்துகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளயபட்ச அமாவாசை என்பது மிக மிக முக்கியமான நாள். பட்சம் எனப்படுகிற இந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தில் இருந்துவிட்டு, மகாளய பட்ச அமாவாசை நாளில், மீண்டும் அவர்களின் லோகமான பித்ரு லோகத்துக்குச் செல்கிறார்கள் என்பது ஐதீகம்.

எனவே, இந்த நாளில், முன்னோர்களை மனதில் இருத்தி, அவர்களின் பெயர்களைச் சொல்லி, எவருக்கேனும் குடை வாங்கிக் கொடுக்கலாம். யாருக்கேனும் செருப்பு வாங்கித் தரலாம். நம் அப்பாவுக்குப் பிடித்த நிறத்திலான சட்டையும் வேஷ்டியும், அம்மாவுக்குப் பிடித்த புடவையும் எவருக்கேனும் வழங்கலாம். தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை வழங்கலாம். ஆறு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். குடை, செருப்பு, உடை, போர்வை, உணவு எவையாக இருந்தாலும் எவருக்குக் கொடுத்தாலும், அவை நம் முன்னோர்களுக்குச் சென்று சேருவதாகவும் அதில் மகிழ்ந்து அவர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.

குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறோம். அடிக்கடி உடைகள் வாங்கி உடுத்திக் கொள்கிறோம். பயணங்கள் செல்ல நல்ல வாகன வசதியையெல்லாம் செய்துகொள்கிறோம். இந்த பூமியில் நாம் பிறப்பதற்குக் காரணகர்த்தாக்களான நம் முன்னோர்களை நினைத்து வணங்குவோம்.

நம் பித்ருக்களை நினைத்துக் கொண்டு, ஒருவருக்கு குடை, ஒருவருக்கு செருப்பு, ஒருவருக்கு போர்வை, ஒருவருக்கு உடை, ஒருவருக்கேனும் உணவு என வழங்கினால், மகாளய பட்ச நன்னாளில் பித்ருக்களும் குளிர்ந்து போவார்கள். நமக்கும் மனதில் திருப்தியையும் அவர்களின் ஆசியையும் கொடுக்கும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

செப்டம்பர் 25, இன்று மகாளய பட்ச அமாவாசை.

x