மகாளய பட்ச ஏகாதசியில் முன்னோர் வழிபாடு அவசியம்!


மகாளய பட்ச ஏகாதசியில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். மிகுந்த புண்ணியத்தையும் ஏராளமான பலன்களையும் கொடுக்கவல்லது இந்த வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மகாளயபட்ச காலம் என்பதை புண்ணிய காலம் என்பார்கள். பட்சம் என்றால் பதினைந்து. இந்த பதினைந்து நாட்களும் பித்ருக்களுக்கான நாட்கள். நம் முன்னோர்களுக்கான நாட்கள். நம் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து நம்முடைய பூலோகத்தில் பதினைந்து நாட்களும் சூட்சுமமாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.

புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்னதாக உள்ள பதினைந்து நாட்களும் மகாளயபட்ச புண்ணிய காலம்தான். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களை ஆராதனை செய்வதற்கு முக்கியமான நாட்கள். புரட்டாசி மகாளய பட்ச காலத்தின் பரணி நட்சத்திர நாள் விசேஷம் என்பது போல், அஷ்டமி திதி மத்யாஷ்டமி என்று போற்றி வணங்குவதற்கு உரிய நாள் என்பது போல், மகாளயபட்சத்தின் ஏகாதசி திதியில், முன்னோரை நினைத்து நாம் செய்யும் பூஜைகளும் வழிபாடுகளும் ஆராதனைகளும் தானங்களும் மும்மடங்கு பலன்களைத் தரும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

21ம் தேதி புதன்கிழமை ஏகாதசி திதி. மகாளயபட்ச ஏகாதசி. இந்தநாளில், முன்னோர் ஆராதனை செய்யுங்கள். முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் ‘அர்க்யம்’ விட்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நம்முடைய சிக்கல்களையும் கவலைகளையும் போக்கி அருளுவார்கள் முன்னோர்கள். நம்மையும் நம் குடும்பத்தையும் முக்கியமாக நம் சந்ததியினரையும் வாழச் செய்வார்கள்.

மகாளயபட்ச ஏகாதசி நாளில், நம் முன்னோர்களை நினைத்து இரண்டுபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் மகா புண்ணியம் என்பது ஐதீகம்!

x