சகல ஐஸ்வர்யமும் தருவார் புன்னைநல்லூர் சாளக்ராம ராமர்!


புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமருக்கு, புரட்டாசி மாதத்தில் விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இந்த தருணத்தில் ஸ்ரீகோதண்டராமரை வணங்கி வழிபட்டால் சகல செளந்தர்யங்களையும் ஐஸ்வர்யங்களையும் தந்தருளுவார் ராமபிரான் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

தஞ்சாவூர் என்றதும் முதலில் பெரியகோயில் நினைவுக்கு வரும். அடுத்ததாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஞாபகத்துக்கு வரும். இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் பின்னே பழைமை வாய்ந்த கோயில் பெருமாள் அமைந்திருக்கிறது. இங்கே, அற்புதமாக நமக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கோதண்டராமர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். புன்செய் நிலங்கள் விளைந்த பகுதியாக இருந்ததால் இந்தப் பெயர் அமைந்ததாம். அம்மன் கோயிலுக்குப் பின்னே, 500 வருடங்கள் கொண்ட பழமையான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீகோதண்டராமர் கோயில்.

இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீகோதண்டராமர். ஆலயத்தின் மிக முக்கியமான விசேஷம்... மூல விக்கிரக ராமர், சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். இப்படியான சாளக்ராம ராமரை வேறெங்கும் தரிசிப்பது அரிது என்கின்றனர் பட்டாச்சார்யர்கள்.

அந்தக் காலத்தில், மாப்பிள்ளைக்கு வழங்கப்படுகிற சீர்வரிசைகளில், வைஷ்ண சம்பிரதாயத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசி மாடம் தருவார்கள். அத்துடன் சாளக்ராமமும் வழங்குவார்கள். சாளக்ராமம் எனும் கல் மகாவிஷ்ணுவின் அம்சம். துளசி என்பது மகாலட்சுமி அம்சம்!

வடக்கே... நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுவதாகச் சொல்வார்கள். நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள். பெண் கொடுத்து, மாப்பிள்ளை எடுத்து என உறவாடிக் கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னருக்கு, சீர்வரிசைகளை வழங்கினார் நேபாள மன்னர். தங்கம், வெள்ளி, பட்டாடைகள், தானியங்கள் என வழங்கியதுடன் கூடவே சாளக்ராமத்தையும் வழங்கினார்.

சில காலங்கள் கழிந்த நிலையில், மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங், தஞ்சை தேசத்தைக் கைப்பற்றினார். சோழ தேசத்தின் வளத்தைக் கண்டு சொக்கிப் போகவேண்டியவர், தீவிர மகாவிஷ்ணு பக்தரான அவர், சாளக்ராமத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். காரணம்... வெறும் உள்ளங்கை அளவு சாளக்ராமம் அல்ல அது. மிகப்பிரம்மாண்டமான ஆளுயர சாளக்ராமம். அதைக் கொண்டு ஸ்ரீகோதண்டராமரின் விக்கிரகத்தை அமைத்தார். அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய அழகிய ஆலயத்தையும் கட்டினார்.

புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயிலுக்கு நிலங்கள், பசுக்கள், அந்தணர்களுக்கு வீடுகள், நிலங்கள் என வழங்கப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் இன்றைக்கும் இருக்கின்றன. ஸ்ரீகோதண்டராமர் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். அவர் குடியிருக்கும் விமானத்தை செளந்தர்ய விமானம் என்கிறது ஸ்தல புராணம்.

சக்தியும் சாந்நித்தியமும் மிக்க ராமர் கோயில் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சுமார் ஐந்தடி உயர ராமர். ஸ்ரீசீதாதேவியுடனும் ஸ்ரீலட்சுமணருடனும் காட்சி தர, உடன் சுக்ரீவனும் இருக்கிறார். அற்புதமாக சேவை சாதிக்கும் ஸ்ரீகோதண்டராமரை புரட்டாசி மாதங்களில் வட மாநிலங்களில் இருந்து வந்து தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீராம நவமி எப்படி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதோ அதேபோல், புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் அமர்க்களப்படும். சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமரை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், இல்லறம் சிறக்கும்; சந்ததியினர் செழித்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

புரட்டாசி மாதத்தில் புன்னைநல்லூர் கோதண்டராமரை கண்ணாரத் தரிசியுங்கள். கவலைகளையும் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து அருளுவார் கோதண்டராமர் பிரான்!

x