திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் அருள்மிகு ஏலவார் குழலியம்மை உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருத்தலத்தில், விஷ ஜந்துக்கள் கடித்து யாரும் உயிரிழப்பதில்லை என நம்பப்படுகிறது. பார்கடலை கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை அருந்திய சிவன் இங்கு குடிகொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோயிலுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்கான புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இக்கோயில் உட்பட 65 கோயில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதன்படி கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று, கடந்த 7ம் தேதி யாகசாலை தொடங்கியது. யாகசாலையில் வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதன் நிறைவாக இன்று காலை பூர்ணாஹூதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, கடத்துடன் கோயிலை வலம் வந்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.