தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது திருக்கண்டியூர். இங்கே சிவனின் சாபத்தைப் போக்கி அருளிய பெருமாள் குடிகொண்டிருக்கிறார். இவரின் திருநாமம் ஸ்ரீஹர சாப விமோசனப் பெருமாள்.
திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில், மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வரம் பெற்றார். இங்கே சிவபெருமான் பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். பலிநாதப் பெருமாள், கமலநாதப் பெருமாள், ஹரசாப விமோசனப் பெருமாள் என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்கள் இங்கே அமைந்திருப்பதாக ஸ்தலபுராணம் விவரிக்கிறது.
தாயாரின் திருநாமம் ஸ்ரீகமலவல்லித் தாயார். இந்தத் தலத்தின் தீர்த்தம் கமல புஷ்கரணி என்றும் கபால புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. கமல புஷ்கரணி என்றால் பத்ம தீர்த்தம். கபால புஷ்கரணி என்றால் கதா தீர்த்தம்.
பெருமாளின் பெயரில் கமலம் சேர்ந்துள்ளது. தாயாரின் திருநாமமும் அவ்விதமே. பெருமாளின் விமானமும் கமலவிமானம் எனப்படுகிறது. தீர்த்தமும் தலமும் கமலம் என்ற சொல்லைக்கொண்டு பஞ்ச கமல க்ஷேத்திரம் எனும் பெருமைக்குரியதாகப் போற்றப்படுகிறது.
ஒருவகையில், திருக்கண்டியூர் திருத்தலத்தை திருச்சி உத்தமர் கோவில் போல, மும்மூர்த்திகள் தலம் என்று கொண்டாடு கிறார்கள். ஹர சாபவிமோசனப் பெருமாள் கோயிலும் எதிரே சிவாலயமும் அடுத்து பிரம்மா கோயிலும் என அமைந்திருக்கிறது.
திருக்கண்டியூர் திருத்தலத்தை நினைத்தாலே நம் சாபங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் 7-வது ஸ்தலம் இது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோயில்.
ஸ்ரீபிரம்மா, சிவபெருமான், மகாபலி சக்கரவர்த்தி முதலானோருக்கு பெருமாள் திருக்காட்சி தந்த தலம் எனும் பெருமையும் உண்டு. மேலும், அகத்திய முனிவருக்கு பெருமாள் காட்சிகொடுத்த ஸ்தலம் என ஸ்தல புராணம் விவரிக்கிறது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் குறித்து பிரம்மாண்ட புராணம் வெகு அழகாக விவரித்துள்ளது. .
கிழக்கு நோக்கிய திருமுகமாக ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் காட்சி தருகிறார். சங்கு, சக்கர, கதாதாரியாய் பெருமாள் இருக்க, உடன் ஸ்ரீதேவியும் பூதேவியும் சேவை சாதிக்கிறார்கள். பெருமாளுக்கு முன்னே பெரிய திருவடியும், சிறிய திருவடியும் அருள்கின்றனர்.
ஆலயத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இடது காலை சற்றே முன்னே வைத்தபடி காட்சி தருகிறார். நாம் நம் வேண்டுதலை வைக்க, அதை நிறைவேற்ற ஓடோடி வரும் பாவனையில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவதாக ஐதீகம்.
ஆலயத்திற்குச் சற்று மேற்கே இருக்கும் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்றும், ஆலயத்திற்கு எதிரே உள்ள தீர்த்தம் பத்ம தீர்த்தம், பலி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றன. கபால தீர்த்தத்தில் நீராடி, அதன் கரையிலுள்ள அரசமரத்தடியில் அமர்ந்து, ஹரசாப விமோசனப் பெருமாளை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏகாதசி விரதமிருந்து, துவாதசி அன்று அதிகாலையில் (நெல்லிக்கனி, அகத்திக்கீரையோடு புளியில்லாமல் சமைத்த உணவு) சாப்பிட்டு விரதத்தை முடித்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்த பாவத்தால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார் சிவபெருமான். யார், எவ்வளவு பிச்சையிட்டாலும் நிறையாத ஈசனின் கபாலம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோயிலில் பூரணவல்லித் தாயார் பிச்சையிட்டதும் நிறைந்தது. அதனால் ஈசனின் பசித்துயர் நீங்கினாலும், கபாலம் கையை விட்டு நீங்காமலிருந்தது.
அவர் அங்கிருந்தவாறே திருமாலை வேண்டினார். “கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழிபட கபாலம் கையை விட்டு அகலும்” என்றார் திருமால். அப்படியே வந்து வழிபட்டார். பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் சாபத்தில் இருந்தும் விடுபட்டார் சிவனார்! இதனால் ஹர சாப விமோசனப் பெருமாள் எனும் திருநாமம் பெருமாளுக்கு அமைந்தது.
சிவதோஷம் காரணமாக மனநிலை சரியில்லாதவர்கள் ஆத்திரத்தால் பாவத்தைச் செய்துவிட்டுத் திண்டாடுபவர்கள், சிவபெருமானின் சொத்தைக் கொள்ளையடித்தவர்கள். இல்லத்தரசி மீது சந்தேகம் கொண்டு படுபாதகச் செயல்களைச் செய்தவர்கள் என சகல தோஷங்களும் பாவங்களும் கொண்டவர்கள், கபால தீர்த்தத்தில் நீராடி ஹர சாப விமோசனப் பெருமாளை வேண்டிக்கொண்டால் அவர்களது பாவங்களையெல்லாம் பெருமாள் மன்னித்து அருளுகிறார் என்பது ஐதீகம்!