குறைகள் தீர்க்கும் குரு வார பிரதோஷம்!


குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை நன்னாளில் வரும் பிரதோஷத்தில் தென்னாடுடைய சிவனாரையும் நந்திதேவரையும் வழிபட்டுப் பிரார்த்தித்தால், நம் குறைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் ஈசன்.

சிவ வழிபாடுகளில் திங்கட்கிழமையன்று சிவபெருமானை தரிசிப்பதும் பிரதோஷ நன்னாளில் சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பதும் முக்கியமானவை என்று சொல்லப்படுகிறது.

மற்றநாட்களில், சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். பிரதோஷ நாளில், சிவலிங்கத் திருமேனிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அபிஷேக பூஜைகள் நடக்கிறதோ, அதேபோல, நந்தியம்பெருமானுக்கும் பூஜைகள் நடைபெறும்.

சொல்லப்போனால், பிரதோஷ நாயகன் என்றே நந்திதேவரைச் சொல்லுவார்கள். பிரதோஷ நாளில், நந்தியை வழிபடுவதும் சிவ வழிபாடு செய்வதும் நமக்கு நற்பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வியாழக்கிழமையை குரு வாரம் என்று சொல்லுவார்கள். குருவாரத்தில் வருகிற பிரதோஷம் இன்னும் விசேஷமானது. குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் சிவபெருமான். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு குருவாக இருந்து உபதேசத்தை அருளிய குருவுக்கும் குரு என்று சொல்கிறது சிவபுராணம். எனவே, குரு வார நன்னாளில், தென்னாடுடைய சிவனையும் நந்திதேவரையும் வணங்கி வழிபட்டால் சகல வல்லமைகளையும் பெறலாம்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. பிரதோஷ நாளில், இந்த நேரத்தில், சிவாலயத்துக்குச் சென்று, நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் நம்மால் முடிந்த அபிஷேக பொருட்களை வழங்கி, நந்திதேவருக்கு அருகம்புல்லும் சிவபெருமானுக்கு வில்வமும் சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் குறைகளையெல்லாம் போக்கியருளுவார் எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமான்.

பிரதோஷ நன்னாளில், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் நவக்கிரகங்களையும் வலம் வந்து பிரார்த்திப்போம். கோஷ்ட மூர்த்தியாக அமைந்திருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபடுவோம். நம் மனக்குறைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து, மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பார் சிவபெருமான். மங்காத செல்வங்களைத் தந்தருளுவார் மகேசன்!

x