வாமன ஜெயந்தியில் வரங்களைத் தருவார் மகாவிஷ்ணு!


இன்று வாமன ஜெயந்தித் திருநாள். இந்த நாளில் வாமனரை மனதார வணங்கிப் பிரார்த்தனைகள் மேற்கொள்வோம்.

மகாபலி சக்ரவர்த்தி, பிரகலாதனனின் பேரன். யாகங்களில் மிக முக்கியமானது அஸ்வ மேத யாகம் என்பார்கள். நூறு அஸ்வ மேத யாகங்களைச் செய்தால் இந்திரப் பதவியைப் பெறலாம் என்று யாகத்தைத் தொடங்கினான் மகாபலி சக்ரவர்த்தி. இந்திரப் பதவி வந்துவிட்டால், மொத்த தேவலோகத்தையும் ஆளலாம் என்பது அவனுடைய திட்டம்.

’இந்த யாகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’ என தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை விடுத்தார்கள். “மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். அதுமட்டுமா? அவனுக்கு குருவின் பரிபூரண ஆசியும் அனுக்கிரகமும் இருக்கிறது. குருவின் அருளில் இருந்து அவனை விலக்கிவைக்கவேண்டும். குருவால் அவன் சபிக்கப்பட வேண்டும். அப்படியொரு சாபத்துக்கு ஆளானால், அவனை வெல்லலாம் நீங்கள்” என மகாவிஷ்ணு அருளினார்.

இதனிடையே, தேவர்களின் அன்னையான அதிதி, காஷ்யப முனிவரிடம் சென்று, “மகாவிஷ்ணுவின் அருளைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள். பூஜைகளில் உயர்ந்தது என்று போற்றப்படும் பயோவ்ரதத்தை உபதேசித்து அருளினார். அதிதியானவள், அந்த விரதத்தை கர்மசிரத்தையாக மேற்கொண்டாள். பூஜையில் மகிழ்ந்த திருமால், பாலகன் வடிவத்தில் அவர்களின் முன்னே தோன்றினார்.

ஆவணி மாதம் வளர்பிறை காலத்தில், துவாதசி திதியில் பாலகனாக, சிறுவனாக, வாமனனாக அவதாரம் எடுத்து காட்சி தந்ததால், அந்த நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று போற்றுகிறோம்; கொண்டாடுகிறோம்; வணங்குகிறோம்.

’வாமனன்’ என்றால் குள்ளமானவர் என்று அர்த்தம். அழகு நிறைந்தவர் என்று பொருள். குள்ளமான தோற்றத்தில் உருவெடுத்திருந்தாலும் உலகையே அளந்து விஸ்வரூபமெடுத்து தன் சுயரூபத்தை பிரம்மாண்டமாகக் காட்டி அருளியவர். அதனால்தான் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்று பாடுகிறோம்.

ஆயிரம் சூரிய ஒளிப் பிரகாசத்துடன் வாமனன் திகழ்கிறார். அவருக்கு சூரிய பகவானே காயத்ரி மந்திரத்தை உபதேசித்து அருளினார். பிரம்மதேவன், வாமனனுக்கு முப்புரிநூல் எனப்படும் பூணூலை அணிவித்தார். கலைமகளானவள், தன் ருத்திராட்ச மாலையை வழங்கினாள். சந்திர பகவான் தண்டமும் பூமாதேவி மான் தோலும் வழங்கினார்கள் என்று விவரிக்கிறது விஷ்ணு புராணம்.

வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மகாபலி யாகம் செய்துகொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அங்கே, வருவோருக்கெல்லாம் தானங்களை வாரிவாரித் தந்துகொண்டிருந்தார் மகாபலி சக்ரவர்த்தி.

குள்ள உருவுடன் வந்த வாமனரைக் கண்டு யாகசாலையில் இருந்தவர்கள் கேலி செய்தார்கள். கிண்டல் பண்ணினார்கள். ஆனால், மகாபலியோ பாலகனாக, குள்ளனாக இருந்த வாமனனை வரவேற்றார். “தங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள்” என்றார். “மூன்றடி நிலம் வேண்டும்” என்று கேட்டார் வாமனன்.

உடனே மகாபலிக்கு ஆச்சரியம். “எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். கேளுங்கள்” என்றார். “மூன்றடி போதும்” என்றார் வாமனர். “இல்லை இன்னும் நிறையவே கேட்கலாம், தயங்காமல் கேளுங்கள்” என வலியுறுத்தினார் மகாபலி. ஆனால், வாமனரோ, “உங்களால் முடிந்த இந்த மூன்றடியைக் கொடுத்தாலே போதும்” என்றார்.

மகாபலியின் குருவான சுக்கிராச்சார்யருக்கு, ‘என்னடா இது’ என்பது போல் சந்தேகம் எழுந்தது. தன் தவ வலிமையால், வாமன உருவெடுத்து வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்துகொண்டார். மகாபலியிடம், “வந்திருப்பது யார் தெரியுமா? மகாவிஷ்ணு வந்திருக்கிறார்” என்றவர், “ஆகவே, அவர் கேட்ட வரத்தைத் தந்துவிடாதே” என்று எச்சரித்துத் தடுத்தார்.

ஆனால், மகாபலி மறுத்துவிட்டார். “அதெப்படி? என்னிடம் வந்து தானம் கேட்டவருக்கு நான் இல்லை என்று எப்படி மறுப்பேன்? அவர் கேட்டதை தருவதுதானே என் இயல்பு. ஆகவே தரப்போகிறேன்” என்றார். இதனால் குருவான சுக்கிராச்சார்யர் வருத்தம் ஏற்பட்டது. முகம் வாடிப்போனது. இறுகிய முகத்துடன் தலைகுனிந்து சென்றார்.

இதுவே சரியான தருணம் என வாமனர், “என்ன... மூன்றடி நிலம் தரமுடியுமா?” என்று கேட்டார். “நிச்சயமாகத் தருகிறேன்” என்றார் மகாபலி. முதல் அடி எடுத்துவைத்தார் வாமனர். முதல் அடியாக உலகை அளந்தார். உலகில் அடுத்த அடிக்கு இடமில்லை. இரண்டாவது அடியாக ஆகாயத்தை அளந்தார். வான் முழுவதும் இரண்டாவது அடியில் நிறைந்தது. “பூமியும் வானும் இரண்டாவது அடியிலேயே நிறைவடைந்துவிட்டது. மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று வாமனர் சிரித்துக்கொண்டே கேட்டார். வாமனரின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தார் மகாபலி. “மூன்றாவது அடியை என் சிரசில் வைத்துவிடுங்கள்” என்று சொன்னார்.

மகாவிஷ்ணுவின் திருவடியில் தஞ்சம் அடைவதும் தஞ்சம் கிடைப்பதும் மகா புண்ணியம். மகாவிஷ்ணுவின் பக்தர்கள், திருவடியில் கதிமோட்சம் கிடைக்காதா என்றே ஏங்குகின்றனர். திருமாலின் திருவடி ஸ்பரிசம் மகா புண்ணியம் என்பதை உணர்ந்து சிரசைக் கொடுத்துப் பணிந்தார் மகாபலி. மூன்றாவது அடியை மகாபலியின் சிரசில் வைத்தார் மகாவிஷ்ணு. மகாபலி எனும் பக்தனை ஏற்றுக்கொண்டு, தன் திருவடியில் தஞ்சம் கொடுத்து அருளினார்.

பெருமாளின் அவதாரங்களில், சம்ஹாரம் இல்லாத அவதாரமாக வாமன அவதாரம் திகழ்கிறது. பெருமாளின் பத்து அவதாரங்களில், குருவுக்கு உகந்த பெருமாள் அவதாரமாக, குரு அவதாரமாக வாமன அவதாரத்தைப் போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள். நவக்கிரகங்களில் உள்ள குருவின் மகிமையை உள்ளடக்கிய அவதாரம் என்று போற்றி வணங்குகின்றனர் பக்தர்கள்.

அகங்காரம் கூடாது என்பதையும், குருவின் உபதேசத்தைக் கேட்டு நடக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது வாமன அவதாரம். திருக்கோவிலூரில் அமைந்திருக்கிறது உலகளந்த பெருமாள் கோயில். பிரம்மாண்டமான இக்கோயில் பழைமை மிகுந்தது என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். அதேபோல், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது உலகளந்த பெருமாள் திருக்கோயில்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செல்வங்களை இழந்து தவிப்பவர்கள், உலகளந்த பெருமாளை தரிசித்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். இழந்த செல்வங்களை மீட்டுத் தருவார் பெருமாள். வாமனரை மனதில் நினைத்துக் கொண்டு திருவோண நட்சத்திர நாளில், சனிக்கிழமைகளில், பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி வேண்டிக்கொண்டால், தொழிலிலும் உத்தியோகத்தில் மேன்மை அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று செப்டம்பர் 7-ம் தேதி புதன்கிழமை வாமன ஜெயந்தி. பெருமாளை மனதாரப் பிரார்த்திப்போம்.

x