ஆவணி ஏகாதசியில் அருள் தரும் பெருமாள் வழிபாடு!


ஆவணி மாத ஏகாதசியில் அருளும் பொருளும் அள்ளித்தரும் பெருமாளை வழிபடுவோம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்திப்போம்.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசி திதி என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான திதி நாள். ’மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என மகாவிஷ்ணு அருளிச் சொல்லியிருந்தாலும் புரட்டாசி மாதம் என்பது முழுக்க முழுக்க திருமால் வழிபாட்டுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது.

புரட்டாசி மாத புதன்கிழமையும் சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் பெருமாளுக்கு விரதம் மேற்கொண்டு, அவரைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களையும் தந்தருளுவார் ஸ்ரீவேங்கடநாதன்.

அதேபோல புரட்டாசி மாதத்துக்கு முன்னதாக உள்ள ஆவணி மாதமும் ஆவணி மாதத்தில் வருகிற ஏகாதசி திதியும் விசேஷமானவை. இந்த நாளில் விரதம் மேற்கொள்வது ரொம்பவே பலன்களைத் தந்தருளக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வீட்டில் உள்ள பெருமாள் திருவுருவப் படங்களுக்கு துளசி சார்த்துவதும், வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, துளசி மாடத்தைச் சுற்றி வந்து வேண்டிக்கொள்வதும் விசேஷமான பலன்களைத் தரும்.

இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் மனக்கவலைகளையும் மனக்குழப்பங்களையும் போக்கும் என்பது ஐதீகம். அதேபோல், திருமாலின் திருமார்பில் குடிகொண்டிருக்கும் மகாலக்ஷ்மியை மனதில் நினைத்துக்கொண்டு, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், தனம் தானியம் இல்லத்தில் பெருகும். சகல ஐஸ்வர்ய பாக்கியங்களையும் தந்தருளுவாள் மகாலக்ஷ்மித் தாயார்.

பெருமாளுக்கு நைவேத்தியமாக புளியோதரை படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் வாழ்வில் இனிமையைச் சேர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி நாள். இந்த நன்னாளில், ஏகாதசி விரதம் மேற்கொள்வோம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், காலையும் மாலையும் நம்மையும் நம் குடும்பத்தையும் மேம்படுத்தும் ஏழுமலையானை மனதாரப் பிரார்த்தனைகள் செய்து ஆராதிப்போம். அருளும்பொருளும் அள்ளித்தந்தருள்வான் வேங்கடவன்.

x