ஜேஷ்டாதேவி ஒன்றும் மூதேவி அல்ல. மூதேவி என்றால், மூத்த தேவி என்று அர்த்தம். ஜேஷ்டா தேவியை மனதார வேண்டிக் கொண்டால் நிம்மதியாக தூக்கமும் உழைப்புக்கேற்ற பலனும் தந்து நம்மிடம் உள்ள தீமைகளையெல்லாம் அழித்து நம்மைக் காத்தருளுவாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
அக்காவுக்கும் தங்கைக்கும் யார் அழகு என்று போட்டி வந்தது. பேச்சுவாக்கில், இந்தப் போட்டிக்குத் தீர்வு காண வேண்டும் என இருவருமே முடிவு செய்தார்கள். நாரதர் அப்போது வந்தார். பிறகென்ன... அவரே நடுவரானார். “எங்கள் இருவரில் யார் அழகு?” என்று சகோதரிகள் கேட்டார்கள்.
‘இதென்னடா வம்பாப் போச்சு’ என்று குழம்பினார் நாரதர். தவித்தார். ‘அக்கா அழகு என்றால் தங்கை கோபித்துக்கொள்வார். தங்கை அழகு என்றால் அக்கா ஆவேசமாகிவிடுவாள். என்ன செய்வது என்று யோசித்தார். “இருவரும் கொஞ்சதூரம் நடந்து சென்றுவிட்டு வாருங்கள் பார்க்கலாம்” என்றார். சகோதரிகள் நடந்தார்கள். பிறகு திரும்பினார்கள். நடந்து வந்தார்கள். பார்த்தார் நாரதர். “வரும்போது தங்கை அழகு; போகும்போது அக்கா அழகு” என்று தீர்ப்பளித்தார். இருவரும் மகிழ்ந்தார்கள். வரும்போது அழகாக இருக்கும் தங்கையின் பெயர் ஸ்ரீதேவி. போகும்போது அழகாக இருக்கும் அக்காவின் பெயரை அகிலமே சொல்லும் ‘மூதேவி’ என்று!
ஆனால், மூதேவி மூத்த தேவி என்று அர்த்தம் என புராணங்கள் விவரிக்கின்றன. மகாலக்ஷ்மி தங்கை. மூதேவி என்று அழைக்கப்படும் அக்காவுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது... ஜேஷ்டா தேவி. ஜேஷ்டா என்றால் ‘முதல்’ என்று அர்த்தம். மகாலக்ஷ்மியைப் போலவே அவளின் சகோதரியும் ஆராதனைக்கு உரியவள்தான். நாம்தான் ‘மூதேவி’ என்றும் ‘தரித்திரம் பிடித்தவள்’ என்றும் தீமைகளைத் தருபவள் என்றும் அவளை நினைத்துக்கொண்டிருக்கிறோம் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஜேஷ்டா தேவி என்பவள், தீமைகளை நமக்குக் கொடுப்பவள் அல்ல. நம்மிடமும் நம்மைச் சுற்றிலுலுமாக உள்ள தீமைகளை அகலச் செய்பவள்; அழித்துக் காப்பவள். மகாலக்ஷ்மி செல்வத்தைத் தருவது போலவே, ஜேஷ்டா தேவியும் ஐஸ்வர்யத்தை அள்ளிக்கொடுப்பவள்தான். அத்துடன், மகாலக்ஷ்மி நமக்குத் தராத இன்னொன்றையும் அவள் வழங்கி அருளுகிறாள் என்கிறது புராணம். அது... தூக்கம்.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் காசு பணமே இல்லாமல் கடன் பிரச்சினையில் சிக்கி உழன்றாலும் தூக்கத்தைப் போல விடுதலையான தருணம் ஏதுமில்லை.
நாம் ஆழ்ந்து தூங்கினால்தான் மறுநாள் விடியலில் நாம் சோம்பல் இல்லாமல் இருக்கமுடியும். சுறுசுறுப்பாக இயங்கமுடியும். மூளையும் உடலும் மந்தமாக இல்லாமல் இயங்கினால்தான், சொல்லும் செயலும் வீரியமாக இருக்கும். அப்படி இரண்டும் கைகூடி இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியையே கொடுக்கும்.
இரவின் காரகன் சந்திரன். ஜேஷ்டாதேவியின் நட்சத்திரம் கேட்டை. புதன் பகவான் நமக்கு புத்தியையும் புத்தியில் தெளிவையும் கொடுப்பவர். எனவே, சனிக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் ஜேஷ்டாதேவியை வணங்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.
அதேபோல், ஜேஷ்டாதேவிக்கு உகந்த திதியாக அஷ்டமியைச் சொல்கிறது சாஸ்திரம். ஒவ்வொரு அஷ்டமி திதியிலும் ஜேஷ்டா தேவியை மனதார வணங்கிவந்தாலே நமக்கு நிறைவான தூக்கம் நிச்சயம். உழைப்பின் உன்னதத்தைச் சொல்லும் தெய்வமாகத்தான் ஜேஷ்டாதேவியை சொல்கிறது புராணம். அஷ்டமியும் கேட்டை நட்சத்திரமும் கூடிய நாளை ஜேஷ்டாஷ்டமி என்று சொல்வார்கள். இந்த நாளில், அவசியம் ஜேஷ்டாதேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நிம்மதியும் கிடைக்கும்; நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்; ஐஸ்வர்யங்களையும் நம் உழைப்பால் அள்ளிக்கொடுப்பாள் ஜேஷ்டாதேவி!
மன்னர்கள், போருக்குச் செல்வதற்கு முன்னதாக, ஜேஷ்டாதேவியை வேண்டிக்கொண்டு கிளம்புவார்கள் என்று சரித்திரமும் எடுத்துரைக்கிறது. “ஜேஷ்டாதேவியே! எங்களுக்கு சுறுசுறுப்பையும் எதிரிகளுக்கு சோம்பலையும் கொடு” என்று வேண்டுவார்களாம். பல்லவர்கள் ஜேஷ்டாதேவி வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் எழுப்பிய ஆலயங்களில், ஜேஷ்டாதேவிக்கும் சந்நிதி அமைத்து வழிபட்டு வந்தார்கள் என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கழுதையை வாகனமாகக் கொண்டும், ஒரு கையில் விளக்குமாறும் இன்னொரு கையில் அபய முத்திரையும் மற்றொரு கரத்தில் தனம் நிரம்பிய பாத்திரமும் கொண்டிருக்கிறாள் ஜேஷ்டாதேவி என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். மாந்தன் எனும் குளிகனை மகனாகவும் மாந்தியை மகளாகவும் கொண்டவள் ஜேஷ்டாதேவி. மூதேவி என்றால் மூன்று தேவியர் என்றும் அர்த்தம் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகாலக்ஷ்மியின் படத்துக்கு மாலைகள் சார்த்தி வேண்டிக்கொள்ளும் போதே, “உன் அக்காவின் அருளும் எங்களுக்குக் கிடைக்கவேண்டும். மந்த புத்தி இல்லாத நிலையையும் தரித்திரம் இல்லாத நிலையையும் நீயும் உன் அக்காவும்தான் தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டாலே, சகோதரிகள் இருவரும் இணைந்து, நமக்கு சகல சம்பத்துகளையும் வழங்கி அருளுவார்கள் என்பது ஐதீகம்!
செப்டம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை, ஜேஷ்டாஷ்டமி. ஜேஷ்டாதேவியை ஆத்மார்த்தமாக வழிபடுவோம். அக்காவின் அருளும் கிடைக்கும்; தங்கை மகாலக்ஷ்மியும் பரிபூரணமாக அருள்பாலிப்பாள்!