கோபத்தைப் போக்கி யோகத்தைத் தரும் நரசிம்மர்!


ஒத்தக்கடை யோக நரசிம்மரை தொடர்ந்து தரிசித்து வந்தால், திருமண பாக்கியம் கைகூடும்; தொழிலிலும் வியாபாரத்திலும் முன்னுக்கு வரலாம்; இழந்த சொத்துகளை மீண்டும் தந்தருளுவார் யோக நரசிம்மர் என்கிறார் இந்த ஆலயத்தின் நாகராஜ பட்டாச்சார்யர்.

திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் எப்படிப் பிரசித்தமோ அதேபோல் நரசிம்மர் கோயிலிலும் பெளர்ணமியில் கிரிவலம் வருகிறார்கள் பக்தர்கள். ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில் என்றும் இதைச் சொல்லுவார்கள். ஆனைமலை யோக நரசிம்மர் கோயில் என்றும் சொல்லுவார்கள். மதுரை - மேலூர் சாலையில் மதுரையின் விளிம்பிலேயே உள்ளது ஒத்தக்கடை. இங்கே ஒரு யானையைப் போல் இருக்கிற மலையைத்தான் யானைமலை, ஆனைமலை என்றெல்லாம் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த மலையின் கீழே, குடைவரைக் கோயிலாக அற்புதமாக இருக்கிறது யோகநரசிம்மர் ஆலயம்.

இங்கே உள்ள யோக நரசிம்மருக்கு இரண்டு விசேஷங்கள். அதாவது, யோக நிலையில் இருக்கிறார் ஸ்ரீநரசிங்க பெருமாள். இன்னொன்று... குடைவரைக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மரும் பாறையைக் குடைந்து வடிக்கப்பட்டிருக்கிறார்.

சக்தி மிக்கவர் இந்த நரசிங்கர். சக்தியை நமக்கு வழங்கி அருளும் பரோபகாரி. எத்தனையோ நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் இந்த க்ஷேத்திரத்து நரசிம்மர்தான், மிகப்பிரம்மாண்டமான உருவத்துடனும் உயரத்துடனும் திகழ்கிறார்.

ரோமச முனிவருக்கு நீண்டகாலமாக ஒரு வருத்தம் இருந்தது. ‘தனக்கு புத்திர பாக்யம் இல்லையே...’ என வருந்தினார். அப்போது இந்த க்ஷேத்திரத்துக்கு வந்தார். தீர்த்தக்குளத்தில் நீராடினார். நரசிம்மர் அவரின் திரு அவதாரத்தின் போது எந்தக் கோலத்தில் இருந்தாரோ அப்படியே தரிசிக்க ஆவல் கொண்டார். அந்த வேண்டுதலுடன் கடும் தவம் மேற்கொண்டார். அந்தத் தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர், அதே உக்கிரக் கோலத்துடன் திருக்காட்சி தந்தருளினார். உக்கிர நரசிம்மரின் வெப்பத்தை, தேவர்களாலும் முனிவர் பெருமக்களாலும் தாங்கமுடியவில்லை. ‘நரசிம்ம பகவானின் உக்கிரத்தை தணிக்க வேண்டும்’ என பிரகலாதனிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

அதன்படி, பிரகலாதன் இங்கே வந்தான். நரசிம்மரிடம் விவரங்களைச் சொல்லிக் கெஞ்சினான். ஆனால், நரசிம்ம மூர்த்தத்தின் உக்கிரம் ஓரளவு குறைந்ததே தவிர, முழுவதுமாக நீங்கவில்லை.

இதையடுத்து, தேவர்கள் அனைவரும் ஸ்ரீமகாலக்ஷ்மியைச் சரணடைந்தனர். இந்த க்ஷேத்திரத்துக்கு மகாலக்ஷ்மித் தாயார் வந்தார். அவரின் திருப்பாதம் பட்டதுமே நரசிம்மரின் உக்கிரம் முழுவதுமாக தணிந்தது. அதனால்தான் இங்கு, மற்ற ஆலயங்களைப் போல் உக்கிரமாக இல்லாமல், சாந்தமும் கனிவுமாக, யோக நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள்.

பிரதோஷ காலம் என்பது சிவபெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் மிகச்சிறப்பாக நடைபெறும் பூஜை. நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும் பிரதோஷ பூஜையானது விமரிசையாக நடைபெறும். பிரதோஷ வேளையில்தான், ஸ்ரீநரசிம்மரின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது விஷ்ணு புராணம். எனவே, ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் இங்கேயும் அமர்க்களமாக நடக்கின்றன

அதேபோல், ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரை தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து வந்தால், எவ்வளவு கோபக்கார கணவராக இருந்தாலும் அவர் சாந்த குணம் கொண்டவராக மாறிவிடுவார் என்பது ஐதீகம்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் கொடிமரம் இருக்கும். இது மலையைக் குடைந்து நரசிம்மரையும் குடைந்து வடிக்கப்பட்ட, அமைக்கப்பட்ட ஆலயம் என்பதாலும் யோக நரசிம்மருக்கு மேலே மலையே விமானமாகத் திகழ்வதால் இங்கே கொடிமரம் இல்லை என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பக்தர்கள், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒத்தக்கடை யோக நரசிம்மரைத் தரிசிக்க திரளாக வருவகிறார்கள். மனதில் ஒரு பிரார்த்தனையை வைத்துக்கொண்டு, வாரம் தவறாமல் யோக நரசிம்மரையும் நரசிங்கவல்லித் தாயாரையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தந்தருள்வார்கள் நரசிங்கரும் தாயாரும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

x