வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீமகாலக்ஷ்மி தாயாரின் மூலமந்திரத்தை ஜபித்து வந்தால், இழந்த செல்வங்களை அள்ளித் தந்தருளுவாள் தாயார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
வெள்ளிக்கிழமை என்பது லக்ஷ்மி வழிபாட்டுக்கு உரிய நாள். வெள்ளிக்கிழமையில் சிவாலயங்களில் உள்ள அம்பிகையை வழிபடுவது போல, பெருமாள் கோயில்களில் குடிகொண்டிருக்கும் தாயாரையும் மனதார வழிபடுவது சிறப்பு.
ஆலயத்துக்குச் சென்று தாயாருக்கு வெண்ணிற மலர்கள் சார்த்தி வழிபடுவதும் வெண் தாமரை மலர்கள் சார்த்தி வழிபடுவதும் ரொம்பவே விசேஷம். அதேபோல் வீட்டிலிருந்தபடியே மகாலக்ஷ்மியை வழிபடுவதும் வளமும் நலமும் சேர்க்கும். சகல செளபாக்கியங்களையும் தந்தருளுவாள் ஸ்ரீமகாலக்ஷ்மி.
வெள்ளிக்கிழமையில், வீட்டிலுள்ள மகாலக்ஷ்மியின் படத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் படத்துக்கு குங்குமமிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மகாலக்ஷ்மிக்கென விளக்கேற்றி வழிபடுவது ரொம்பவே உத்தமம். அதிலும் நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் நிம்மதியைக் கொடுக்கவல்லது. சகல செல்வங்களையும் தந்தருளக்கூடியது.
மகலக்ஷ்மியின் மந்திரத்தைச் சொல்வதும் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒலிக்கவிட்டுக் கேட்பதும் பலன்களைத் தரும்.
ஸ்ரீமகாலக்ஷ்மியின் மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி ஏய் யேஹி
ஏய் யேஹி சர்வ
செளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
எனும் மூல மந்திரத்தை தினமும் சொல்லலாம். வெள்ளிக்கிழமைகளில், இந்த மந்திரத்தைச் சொல்வது மகத்தான பலன்களை வாரி வழங்கும். குறிப்பாக, வளர்பிறை வெள்ளியில், வீட்டில் மகாலக்ஷ்மி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால், செல்வத்தைத் தந்தருளுவாள். இழந்த செல்வங்களை இரட்டிப்பாக வழங்கிக் காப்பாள் மகாலக்ஷ்மி.
108 முறை இந்த மூலமந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள், 16 முறை ஆத்மார்த்தமாக ஜபித்து வரலாம். மூல மந்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டு, மகாலக்ஷ்மித் தாயாருக்கு பசும்பாலில் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். முடிந்தால், சர்க்கரைப் பொங்கல் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளிலும், வளர்பிறை வெள்ளிக்கிழமைகளிலும் வீட்டிலிருந்தபடியே ஸ்ரீமகாலக்ஷ்மி மூலமந்திரத்தை ஜபித்து வணங்கி வழிபட்டு வந்தால், தனம் தானியம் பெருகும். இல்லத்தில் இழந்த செல்வங்களை அள்ளித் தருவாள் ஸ்ரீமகாலக்ஷ்மி தாயார்.