சஷ்டி, விசாகம் இணைந்தநாள்; வெற்றி தருவான் சக்திவேலன்!


சஷ்டியும் விசாகமும் இணைந்தநாளில், சக்திவேலனை வழிபட்டுப் பிரார்த்தனைகள் செய்வோம். நம் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் தந்தருளுவான் வெற்றிவடிவேலவன்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் உண்டு. அந்த நட்சத்திர நாட்களில், அந்த தெய்வங்களை வணங்கி வழிபடுவது நம்முடைய வழக்கம். அதேபோல், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய திதிகள் இருக்கின்றன. அந்தத் திதி நாளில், உரிய தெய்வங்களை ஆராதித்து வழிபட்டு வேண்டிக் கொண்டால், நாம் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. மகாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம். ஸ்ரீநரசிம்மருக்கு உரிய நட்சத்திரம் சுவாதி என்றெல்லாம் விவரித்துள்ளது புராணம். அதேபோல், முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரத்தை கந்த புராணம் தெரிவிக்கிறது. ஆனாலும் கூட, பூசம் நட்சத்திரமும் விசாகம் நட்சத்திரமும் உத்திரம் நட்சத்திரமும் முருகக் கடவுளை வணங்குவதற்கு உரிய அற்புதமான நட்சத்திர நாளாகப் போற்றப்படுகிறது.

திதியில் சஷ்டி திதியன்று கந்தகுமாரனை வணங்கி வழிபடவேண்டும். இதை சஷ்டி விரதம் என்றே போற்றுகிறோம். சஷ்டி விரத நாளில் விரதம் மேற்கொள்வது போல, விசாக நட்சத்திர நாளிலும் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானைத் தரிசிப்பார்கள் பக்தர்கள்.

செப்டம்பர் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி கொண்ட நாள். முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். அதேபோல, விசாக நட்சத்திரமும் கூடிய நன்னாள். எனவே, சஷ்டியும் விசாக நட்சத்திரமும் கூடிய அருமையான நாளில், முருகக் கடவுளை நோக்கி விரதம் மேற்கொள்வோம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்வோம்.

வள்ளிமணாளனுக்கு உகந்த செந்நிற மலர்களான செவ்வரளி முதலான மலர்களைச் சூட்டி, கந்தவேலனை அலங்கரித்து வேண்டுவோம். அல்லல்கள் அனைத்தையும் போக்கி அருளுவான் சிவமைந்தன். இந்த நன்னாளில், அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கோ அல்லது முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயத்துக்கோ சென்று, சுப்ரமணியரை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் அளப்பரிய நன்மைகளைத் தந்தருளும் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

வேலவனுக்கு உகந்த எலுமிச்சை சாதம் நைவேத்தியம் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதால் இல்லத்தில் தனம் தானியம் பெருகும். கவலைகளும் கடன் முதலான தொல்லைகளும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

x