அருளும்பொருளும் தருவார் அகரம் கோவிந்தவாடி குரு பகவான்!


அகரம் கோவிந்தவாடி குரு பகவான்

அகரம் கோவிந்தவாடி தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், நமக்கு அருளும் பொருளும் அள்ளித்தருவார். யோகமும் ஞானமும் தந்தருளுவார் குரு தட்சிணாமூர்த்தி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது கம்மவார்பாளையம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அகரம் கோவிந்தவாடி எனும் திருத்தலம். இங்கே அற்புதமான கோயிலில் அழகுற தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் குரு பகவான்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... கோயிலில் மூலவராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீகயிலாசநாதரும் தட்சிணாமூர்த்தியைப் போலவே தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். ஐப்பசி மாதத்தில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அப்போது சிவனாருக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அகரம் கோவிந்தவாடி திருத்தலத்தில், குரு தட்சிணாமூர்த்திக்கும் ஐப்பசியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது!

அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. இவளும் இங்கே தன் சக்தியை வெளிப்படுத்தியபடி, நமக்கு வழங்கியருளிய வண்ணம் காட்சி தருகிறார். இங்கே அம்பாளுக்கு சுமங்கலி பூஜை செய்வது ரொம்பவே விசேஷம். செவ்வாய், வெள்ளியில் அம்பாளுக்கு சுமங்கலி பூஜை செய்து வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் உள்ள கன்னியருக்கு விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். திருமண தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இல்லத்தரசியருக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைத்து, பரிபூரணமான சந்தோஷத்துடன் ஆதர்ஷ தம்பதியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கும் ஆலயத்தில் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. தொன்மை மிக்க இத்திருத்தலம் சிற்ப நுட்பங்களுடன் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போலவே இங்கும் கோஷ்டத்தில் இருந்தபடி ஆனால், தனிச்சந்நிதியில் இருந்துகொண்டு, நம் கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுகிறார் குரு பகவான்.

சுமார் ஆறடி உயரத்தில் அப்படியொரு திருமேனி. குரு பகவானின் கண்கள், நம்மை நோக்கியபடியே இருக்கின்றன. அந்தக் கண்களில் அப்படியொரு தீட்சண்யமும் சாந்நித்தியமும் பொலியப்பட்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்திக்கு ஒவ்வொரு வடிவங்கள் உள்ளன. இந்த தட்சிணாமூர்த்தியை வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று திருநாமம் சொல்லி சிலாகிக்கிறது ஸ்தல புராணம். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோவிந்தவாடி குரு பகவானைத் தரிசிக்க குவிகின்றனர் பக்தர்கள்.

அகரம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்திக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதலே சிறப்பு பூஜைகளும் விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தட்சிணாமூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தியும் கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வேண்டிக்கொண்டால், நம் புத்தியைத் தெளிவாக்குவார் குருபகவான். நம் குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.

x