திடீர் செல்வந்தர்களைப் பார்த்து, “அவனுக்கு சரியான சுக்கிர யோகம் அடிச்சிருச்சுய்யா” என்று சொல்வோம். கிரகங்களில் அப்படியொரு சுபக்கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர திசை சரியாக இருந்தால், அவரின் வாழ்க்கையில் கல்வி, வேலை, தொழில், திருமணம், வாரிசுகள், வீடு மனை யோகம், புகழ் என அனைத்தும் சரியாகவே அமைந்துவிடும்.
ஒருவர் பணச்செழிப்புடன் இருப்பதற்கு சுக்கிர பகவானின் பேரருள் மிக மிக அவசியம். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாக வெள்ளிக்கிழமையைச் சொல்வார்கள். பொதுவாகவே, வெள்ளிக்கிழமை என்பது வழிபாட்டுக்கு உரிய நன்னாள். மேலும், மகாலக்ஷ்மியை வழிபடுவதற்கு வெள்ளிக்கிழமையே உகந்தநாள் என்று போற்றுகிறார்கள்.
வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால், ஐஸ்வரிய கடாட்சம் இல்லத்தில் நிறைந்திருக்கும். சுக்கிர பகவானுக்கு உரிய உலோகமாக வெள்ளி சொல்லப்படுகிறது. வெள்ளிப் பொருட்களில் சுக்கிர பகவான் வாசம் செய்வதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே, வீட்டுப் பூஜையறையில் வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது சகல விதமான நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையைப் பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக, பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பணப் பரிமாற்றம் போன்றவற்றுக்கும் இது ஏற்றது.
தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர். இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார். சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவோம். சுக்கிரனுக்கு கல்கண்டு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து படைக்கலாம். கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷம். சுக்கிரனுக்கு வெண்மை நிற மலர்கள் உகந்தவை. எனவே மல்லிகை, முல்லை, சம்பங்கி, வெண் தாமரை முதலான வெண்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால், சுக்கிர யோகம் பலம் பெறும். சுக்கிரனின் அருளைப் பெறலாம். பொன்னும் பொருளுமாக நிம்மதியாக வாழலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்குச் சென்று தாயாரை வணங்கி வந்தால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம். குபேர யோகத்தை அள்ளித்தந்தருளுவார் நாயகி என்பது ஐதீகம்.
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்!
என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும். வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம். குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.