எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவார் நரசிங்கப் பெருமாள்!


’வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் யாருக்குத்தான் இல்லை. அப்படியான தருணங்களில், ‘கடவுள்னு ஒருத்தர் இருக்காரான்னே தெரியலப்பா’ என்று நொந்து கொள்கிற சராசரி மனிதர்கள்தான் நாம்.

ஆனால், பிரகலாதன் அப்படிப்பட்டவனில்லை. இரண்யகசிபு எனும் அரக்கனுக்கு மகனாகப் பிறந்தாலும் மகாவிஷ்ணுவின் பக்தனாகவே இருந்தான். ‘ஹரியின் நாமம் சொல்லாதே’ என்று தந்தை சொன்னபோது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பரந்தாமனையே நினைத்துக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவனுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அப்போதும், ‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நாராயணன்’ என்று திருமாலை கெட்டியாக மனதுள் வரித்துக்கொண்டு நின்றான்.

அவனுடைய உண்மையான பக்திக்கும் அவன் உண்மையான பக்தன் என்பதற்கும் எடுத்துக்காட்டாக தூணிலிருந்தே உதித்தார் மகாவிஷ்ணு. அப்படி அப்போது அவர் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். பெருமாள் எடுத்த நான்காவது அவதாரம் இது என்கிறது விஷ்ணு புராணம்.

பக்தியில் குழப்பமோ கேள்விகளோ கூடாது. முழுமையான பக்தியுடன் இருந்தால் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறலாம் என்பதற்கு பிரகலாதன் எனும் பக்தனே ஆகச்சிறந்த உதாரணம். அதனால்தான் அவனை பக்த பிரகலாதன் என்று போற்றுகிறோம். பிரகலாதனைப் போல் உண்மையான பக்தியுடனும் நம்பிக்கையுடனும் நரசிம்மரை வழிபட்டால் நாம் நினைத்ததையெல்லாம் நடத்திக் கொடுப்பார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நரசிம்மரின் மூல மந்திரம் மிகவும் மகத்துவம் மிக்கது. செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் நரசிம்ம மூலமந்திரத்தை 108 முறை ஜபிப்பது உன்னதமான பலன்களைத் தந்தருளும்.

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்

சர்வதோ முகம் நரசிம்மம் பீஷணாம்

பத்ரம் ம்ருதயம் ம்ருதயம் நமாம் யஹம்

என்கிற மூலமந்திரத்தை ஜபித்து, ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வந்தால், தீமைகள் அனைத்தையும் அழித்தொழிப்பார். நம் வாழ்வில் இதுவரை இருந்த துக்கங்களையும் துயரங்களையும் போக்குவார். நம் எதிரிகளை வீழ்த்தி, எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவார் ஸ்ரீநரசிங்கப்பெருமாள் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்மரை மறக்காமல் தரிசித்து அல்லது வீட்டுப் பூஜையறையில் அமர்ந்தபடி நரசிம்ம மூல மந்திரத்தை மனமொன்றி ஜபித்து வாருங்கள். பிரகலாதனுக்கு அருளியது போல் நமக்கும் அருளிச்செய்வார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள்! மந்திரம் சொல்லத் தொடங்கிய நாளில், ஏதேனும் ஒருநாள்... ஒருமுறையேனும் நரசிம்ம க்ஷேத்திரத்துக்குச் சென்று, நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து, துளசி மாலை சார்த்தி தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் பிரச்சினைகளையெல்லாம் போக்கியருளுவார் சிம்மமூர்த்தி!

x