இன்று (ஆகஸ்ட் 23) செவ்வாய்க்கிழமை ஏகாதசி. இந்த நன்னாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை வணங்குவோம். துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
பெருமாளை வழிபட, கால நேரம் எதுவுமில்லை என்பார்கள். எந்தநாளில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பெருமாளை வழிபடலாம். 108 திவ்விய தேசங்களில் ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று தரிசிக்கலாம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வணங்கலாம். அவ்வளவு ஏன்... நம் வீட்டில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை மனதார நமஸ்கரித்து பூஜிக்கலாம்.
ஆனாலும் பெருமாளை திருவோண நட்சத்திர நாளிலும் ஏகாதசி திதி நன்னாளிலும் வணங்கி வழிபடுவது இன்னும் நம் வழிபாட்டுக்கு பலம் சேர்க்கும்; பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஏகாதசியும் துவாதசியும் பெருமாளுக்கு உகந்த, பெருமாளை வழிபடுவதற்கான நாட்கள். ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு துவாதசியில் நிறைவு செய்கிற பக்தர்களும் இருக்கிறார்கள். அதேபோல், ஏகாதசி விரத நாளில், உண்ணாநோன்பு முதலான விஷயங்களில் ஈடுபடாமலும் கூட, மகாவிஷ்ணுவை வணங்கி ஆராதிக்கலாம்.
ஏகாதசி நன்னாளில், மகாவிஷ்ணுவின் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வதும் அல்லது அதை ஒலிக்கவிட்டு காதாரக் கேட்பதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வணங்கி வழிபடுவது இல்லத்தில் இருந்த சுபகாரியங்களுக்கான தடைகளை நீக்கும்; நல்ல சத்விஷயங்களையெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்து அருளுவார் திருமால்.