சகல ஐஸ்வர்யமும் தரும் இந்திர திசை; இந்திர மந்திரம்!


இந்திரன்

“இந்தத் திசை பார்த்து வாசல் இருந்தால் நமக்கு அது சரியாக இருக்கும், அந்தத் திசையைப் பார்த்து வீட்டு வாசல் இருந்தால் எனக்குச் சரியாக இருக்கும்” என்றெல்லாம் சொல்லுவோம். ஆனால், ஒரு வீட்டு வாசல் என்பது கிழக்குத் திசையாக இருந்துவிட்டால், அது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கும் என்பார்கள்.

ஜோதிட சாஸ்திரம், வடக்கு, தெற்கு, மேற்கு என எந்தத் திசைக்கும் இல்லாத பொதுவான எல்லா விஷயங்களுக்கும் கிழக்கு மட்டுமே இணைந்திருக்கிறது. அப்படிக் கிழக்கு திசை முக்கியத்துவம் பெறுவதற்கு, சூரியன் கிழக்கு திசையில் உதிப்பதையும் விடியற் பொழுது என்பது கிழக்கில் இருந்து தொடங்குகிறது என்பதையும் மட்டுமே கொண்டு சொல்லப்படவில்லை. மற்றொரு காரணமும் இருக்கிறது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள்.

கிழக்குத் திசை என்பது இந்திரனின் திசை. கிழக்குத் திசையானது நம் குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது என சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. இந்திரன் என்பவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். தேவாதிதேவனாகத் திகழ்பவன். அதுமட்டுமா? குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என புராணங்கள் விவரிக்கின்றன. அதனால்தான் கிழக்குத் திசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். கிழக்கு பார்த்த வீடு என்பது எல்லோருக்கும் சரியாகப் பொருந்தும் என்கிறோம். கிழக்குப் பார்த்தபடி பெரியோர் நின்றிருக்க, அவர்களை நமஸ்கரிக்கிறோம். அவ்வளவு ஏன்? நம் வீடுகளில் பூஜையறையையும் சுவாமியையும் கிழக்குப் பார்த்தபடிதான் வைத்திருக்கிறோம்.

அதேபோல், கிழக்குத் திசை மழலைச் செல்வத்தைத் தரும் திசை. மனதில் மகிழ்ச்சியை அளிப்பதற்கான திசை. இந்திராதிதேவன் சுகபோகங்களுக்கு சொந்தக்காரன். கிழக்கு திசையைப் பார்த்து, இந்திரனை நினைத்து வேண்டிக்கொண்டாலும் சந்தான பாக்கியம் முதலான சகல சம்பத்துகளும் நம்மை வந்தடையும் என்பது ஐதீகம்.

இந்திரன் உத்தரவால், விஸ்வகர்மா எனும் தேவதச்சனின் தபோ பலத்தினால் அவனுடய லோகம் நிர்மாணம் செய்யப்பட்டது என விவரிக்கிறது புராணம். இங்கே, கற்பகத் தருவே ஆடைகளையும்-நகைகளையும் வழங்குகிறது என்றும், காமதேனு என்ற தெய்வீகப் பசுவே அனைவருக்கும் உணவளிக்கிறது என்றும், தேவலோக பூமியில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர் என்றும், அவர்களையெல்லாம் காப்பவன் இந்திரன் என்றும் புகழ்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இந்திரன்

இந்திரனை தேவேந்திரன் என்கிறோம். இவனது ஆயுதம் வஜ்ரம். இந்திர திசை என்பது கிழக்கு. இந்திர திசைக்கு அதிபதி சூரியன். சூரியனின்றி கோள்கள் இயங்குவதில்லை. நம் வாழ்க்கையில் எவ்வித கோலாகலமும் நிகழுவதில்லை.

இந்திரனுக்குரிய மந்திரத்தை தினமும் சொல்லி வருவது விசேஷம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது விடியும் வேளையில், இந்திர மந்திரத்தை ஜபித்து வந்தால், நம் இல்லத்தில் செல்வம் செழிக்கும். சகல ஐஸ்வரியங்களும் கொழிக்கும். வீடு, மனை யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்திர ஸ்லோகம் இதுதான்...

ஓம் தேவராஜய வித்மஹே

வஜ்ரஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்

ஓம் லம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே

சகஸ்ராக்ஷாய தீமஹி

தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்.

ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே

வஜ்ரஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திர ப்ரசோதயாத்

இதை தினமும் சொல்லி வருவோம். கிழக்குத் திசையைப் பார்த்து அமர்ந்து சொல்லி வருவோம். ஞாயிறு, புதன், வெள்ளி முதலான நாட்களை இந்த ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டு, ஒருவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கி உதவுவோம். நம் வினைகள் அனைத்தும் களையும்; வேதனைகள் முழுவதும் தீரும். சகல சம்பத்துகளும் தந்தருளுவார் தேவர்களின் அரசனான இந்திரன்!

x