ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை என்பது எப்போதுமே விசேஷம். இந்த நாளில் சிவபெருமானையும் சூரியக் கடவுளையும் வணங்கி வழிபட்டால், சிவனாரின் பேரருளும் சூரியக் கிரகத்தால் உண்டான தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தை வெள்ளி விசேஷம் என்பார்கள். அதேபோல் ஆடிச் செவ்வாய் அற்புதமான நாள் என்பார்கள். புரட்டாசியில் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பார்கள். கார்த்திகையில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை மகத்துவம் வாய்ந்த நன்னாள் என்பார்கள். அதேபோல், ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை என்பது மகோன்னதமான நாள். சிவ வழிபாட்டுக்கு உரிய நன்னாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது சாஸ்திரம். நம்மில் பலரும் தினமும் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வதே இல்லை. சூரியனுக்கு ஞாயிறு என்றொரு பெயர் உண்டு. ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்தநாள். இந்த நாளிலேனும் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை நமஸ்கரிப்பதும் அவரைப் பிரார்த்திப்பதும் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில், சூரியனாரை வணங்கும் போது, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் அதை ஒலிக்கச் செய்து கேட்பதும் இல்லத்திலும் உள்ளத்திலும் நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணும். துர்தேவதைகளை நம்மிடம் அண்டவிடாமல் காத்தருளும்.
பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய வழிபாடு செய்வது பலமும் பலனும் தரும் என்பார்கள். அப்படியிருக்க, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பது இன்னும் இன்னுமான நல்ல அதிர்வுகளை நமக்குள் உண்டுபண்ணக் கூடிய நாள். அதிலும் கிரகங்களைக் கட்டியாளுகின்ற இறைவனாகத் திகழும் சிவபெருமானை தரிசிப்பதும் வணங்குவதும் வில்வம் கொண்டு அர்ச்சிப்பதும் மும்மடங்கு பலன்களையும் தந்தருளும் என்கின்றன ஞானநூல்கள்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமையில், காலையில் சூரிய நமஸ்காரம் செய்வோம். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வோம் அல்லது ஒலிக்கச் செய்து காதாரக் கேட்போம். அடுத்து, சிவபெருமானை வணங்குவோம். சிவபுராணம் படிப்பது ரொம்பவே புண்ணியம் நிறைந்தது. அதேபோல், ‘நமசிவாய’ என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபித்து, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வம் சார்த்தி வழிபடுவது முன் ஜென்ம வினைகளையெல்லாம் தீர்க்கவல்லது. கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். ஜாதகத்தில் சூரிய கிரகம், வலுவாகி இன்னும் நற்பலன்களை வழங்கும் என்பது உறுதி என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.