மயிலாடுதுறை குத்தாலத்துக்கு அருகில் அமைந்துள்ளது தேரழுந்தூர் திருத்தலம். திருவழுந்தூர் என்பதே தேரழுந்தூர் என மருவியதாகச் சொல்வார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் ரொம்பவே விசேஷம். சாளக்கிராமத்தில் சுமார் 13 அடி உயரத்துடன் மூலவர் அழகுற சேவை சாதிக்கிறார். திருமணத் தடைகளை நீக்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது. மூலவரின் திருநாமம் ஸ்ரீதேவாதிராஜன். உற்சவரின் திருநாமம் ஸ்ரீஆமருவியப்பன்.
ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். அண்ணனும் ஆடுகிறார்; கணவரும் ஆடுகிறார். யார் பக்கம் நிற்பது என்று ஒருகணம் குழம்பினாலும், அண்ணனின் பக்கமே நின்று ஆட்டத்தை உள்ளூர ரசித்தாள் உமையவள். நடுவராக இருந்து, பெருமாளே ஜெயித்தார் எனும் முடிவைச் சொல்ல, சிவனார் கடும் கோபம் கொண்டார். ‘பசுவாக மாறுவாயாக’ எனச் சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ‘ஆமருவியப்பன்’ எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
மிகப்பிரம்மண்டமான திருக்கோயில். அற்புத மண்டபங்களும் தூண்களும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறது ஆலயம். இங்கே தாயாரின் திருநாமம் ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார். மார்க்கண்டேய முனிவர் வணங்கி வழிபட்டு அருள் பெற்ற திருத்தலம். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், ஞானமும் யோகமும் பெறலாம் என்பது ஐதீகம்.
மூலவர் குடிகொண்டிருக்கும் மூலஸ்தானத்தில், பெருமாளுடன் கருடனும் பிரகலாதனும் இருக்கிறார்கள். இது வேறெந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பு. மேலும், இந்த ஆலயத்தில், கம்பர் தன் மனைவியுடன் சந்நிதி கொண்டிருக்கிறார். ஆழ்வார்களையும் ஆண்டாளையும் அடுத்தடுத்து தரிசிக்கலாம். மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் சேவை சாதிக்க, இடது பக்கத்தில் கருடாழ்வாரும் வலது பக்கத்தில் பிரகலாதனும் இருக்கின்றனர். பெருமாள், தன் இடது கரத்தில் கதை ஊன்றியபடி இருக்கிறார். இன்னொரு சிறப்பு... காவிரித்தாய் பெருமாளுக்கு அருகில் மண்டியிட்ட நிலையில் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்தாலே, காவிரியில் 108 முறை தீர்த்த நீராடிய பலன் நிச்சயம் என்பது ஐதீகம்.
கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தக்குளமும் விசேஷம். இதை தர்ஷண புஷ்கரணி என்றும் காவிரி என்றும் சொல்வார்கள். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது. 108 திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று.
தேரழுந்தூர் திருத்தலத்துக்கு வந்து, தேவாதிராஜ பெருமாளை கண்ணும் கருத்துமாக வழிபட்டுப் பிரார்த்தித்தால் சகல சத்விஷயங்களையும் ஐஸ்வர்யங்களையும் தந்தருளுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். தேவாதிராஜப் பெருமாளை வணங்கினால், திருப்பம் நிச்சயம்!