ஆடி கடைசிநாளில் சஷ்டி: வெற்றியைத் தரும் முருக தரிசனம்!


ஆடி மாதத்தின் கடைசி நாளான ஆவணி மாதத்தின் முதல்நாளான இன்று (புதன்) சஷ்டி திதி. இந்த நாளில் முருகப்பெருமானை தரிசிப்போம். நமக்கு வெற்றிகளைத் தந்து அருளுவார் வேலவன்.

திதியில் சஷ்டியும் நட்சத்திரத்தில் கார்த்திகையும் முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்கள். முருகப் பெருமானை அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வணங்கி வழிபடலாம். சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் இருக்கிற சந்நிதியில் வீற்றிருக்கும் முருகரை வணங்கி வழிபடலாம்.

கையில் வேலுடன் எதிரிகளை துவம்சம் செய்து நம்மைக் காத்தருளத் தயாராக மயிலின் மீது அமர்ந்திருக்கும் வேலவ தரிசனம், எப்போதுமே நமக்கு வெற்றியைத் தந்தருளும். வேதனைகளைப் போக்கும். நமக்கு இருக்கிற மறைமுக, நேரடி எதிர்ப்புகளை துவம்சம் செய்யும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு உகந்த நிறம் சிகப்பு. எனவே, செவ்வரளி முதலான மலர்களைக் கொண்டு அவருக்கு சார்த்தி வணங்குவது விசேஷம். அதேபோல், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் எனும் பெருமைக்கு உரியவர் முருகன். பிரணவப் பொருள் தெரியாததால், பிரம்மாவையே சிறைவைத்து, உபதேசித்து அருளியவர் என்றெல்லாம் புராணங்கள் கந்தபெருமானை விவரிக்கின்றன. ஆகவே, கந்தன் ஞானகுருவாகவும் திகழ்கிறார்.

சஷ்டி திதி நன்னாளில், முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், நம் கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். முருகக் கடவுளுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தோருக்கு வழங்கி, பிரார்த்தனை செய்துகொண்டால், நம் வாழ்வில் செவ்வாய் முதலான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பழநி, சுவாமிமலை முதலான ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு தலத்தில், சஷ்டி திதியில் வணங்கினால், முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல், ஆறுபடை வீடுகள் என்றில்லாமல், வயலூர், சென்னிமலை, குமரகிரி முதலான தலங்களில் உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதும், கந்தகோட்டம், திருப்போரூர், முதலான பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும், அருகில் உள்ள சிவாலயங்களில் வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் சுப்ரமணியரை கண்ணாரத் தரிசிப்பதும் மிகுந்த பலன்களை வழங்கும்.

சஷ்டி திதியில் ஆவணி மாதப் பிறப்பில், செந்தில் வடிவேலனை வணங்கித் தொழுவோம். மனமுருகப் பிரார்த்திப்போம். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் வெற்றி வடிவேலவன்.

x