சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!


ஸ்ரீகணபதி

இன்று (15.08.2022) திங்கட்கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், ஆனைமுகனை வழிபட்டு பிரார்த்தனைகள் செய்தால், நம் சங்கடங்களெல்லாம் தீரும். வாழ்வில் நம் சந்தோஷங்கள் பெருகும்.

மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி நன்னாள் வரும். ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வருகிற சங்கடஹர சதுர்த்தியில் பிள்ளையாரை மனமுருக வேண்டி வந்தாலே நம் விக்னங்களையெல்லாம் தீர்த்துவைப்பார் விநாயகப் பெருமான். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு கணபதியைத் தொழுது வணங்குவோரும் உண்டு.

விநாயகர்

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று விவரிக்கிறது புராணம். மற்ற சங்கடஹர சதுர்த்தியை விட மகா சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷமானது.

இந்தநாளில், காலையும் மாலையும் விநாயகப் பெருமானைத் தரிசிப்பது மகா புண்ணியம். குறிப்பாக, மாலையில் ஆலயங்களில், பிள்ளையாரப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது அவற்றையெல்லாம் கண்ணாரத் தரிசித்து, அருகம்புல் மாலை சார்த்தி அவரை வேண்டிக்கொள்வது சிறப்பு.

நம் வீட்டில் பிள்ளையார் படம் நிச்சயம் இருக்கும். சிலர், விநாயகரின் சிலைகளைக் கூட வைத்திருப்பார்கள். சிலை இருந்தால் அபிஷேகம் செய்யலாம். அதேபோல், பிள்ளையார் திருவுருவப் படத்துக்கு அருகம்புல் மாலையோ வெள்ளெருக்கு மாலையோ சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

மகா சங்கடஹர சதுர்த்தி நாளில், பிள்ளையார் பெருமானுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்யலாம். கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தும் வேண்டிக்கொள்ளலாம்.

திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். திங்கள் என்றாலும் சோமன் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். தன் சிரசில் சந்திரனையே பிறையாக்கி அணிந்திருக்கும் சிவபெருமானுக்கும் உரிய நாள். அப்பன் சிவனாரை சோம வார நாளில் வணங்கும் போது, முதலில் ஆனைமுகத்தானை மகா சங்கடஹர சதுர்த்தியில் வணங்கிவிட்டு, சிவ வழிபாடும் செய்வது நம் சிந்தனையில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருளும். நம் சங்கடங்களையெல்லாம் போக்கி சந்தோஷத்தைத் தந்து அருளுவார் பிள்ளையாரப்பன்!

x