கொடுத்த பணத்தை திருப்பித் தரச் செய்வார் எமதர்மராஜா!


எமதர்ம ராஜா

எமதர்மராஜாவுக்கு ‘படி கட்டுதல்’ எழுதி வணங்கினால், நம்மிடம் பணத்தையோ பொருளையோ வாங்கிக் கொண்டு ஏமாற்றுவோர், விரைவில் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள் என்பது ஐதீகம்.

எம தர்மராஜாவுக்கென தனிக்கோயில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்சிற்றம்பலம். பட்டுகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில், பட்டுகோட்டையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா ஆலயம். முறுக்கு மீசை, ஆறடி உயர எருமையின் மீது, திருக்கரங்களில் பாசக்கயிறும் ஓலைச்சுவடியும் கதாயுதமும் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்மராஜா.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தை, சில வருடங்களுக்கு முன்பு புனரமைத்ததாகவும் சொல்கிறது ஸ்தல வரலாறு.

புதுக்கோட்டைப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் அம்பாளுக்கு பிரகதாம்பாள் என்றே திருநாமம் அமைந்திருக்கும். ஒருசமயம், சிறு குழந்தையாக அவதரித்த பிரகதாம்பாளை, எமதர்மராஜனிடம் வழங்கிய சிவனார், ’இவளே பார்வதி தேவி. இவளை பூவுலகிற்கு அழைத்துச் செல்வாயாக. உரிய வயதும் தருணமும் வரும் வேளையில், இவளை திருமணம் புரிவேன்’ என அருளினார். அதன்படி திருச்சிற்றம்பலம் எனும் தலத்துக்கு எமதர்மராஜன் குழந்தை பிரகதாம்பாளை அழைத்து வந்தார்.

அங்கே வளர்ந்த பிரகதாம்பாளுக்கு உரிய வயது வந்தது. சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைப்பது என தேவர்களும் முனிவர்களும் முடிவு செய்தனர். அப்போது சிவனார் கடும் தவத்தில் இருந்தார். அவரின் தவத்தைக் கலைத்து உமையவளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக, திருச்சிற்றம்பலத்துக்கு அருகில் உள்ள மதமட்டூர் எனும் ஊரில் இருந்து அவனை சிவனார் மீது பூங்கணைத் தொடுக்க உத்தரவிடுகின்றனர். அவன்... மன்மதன். அவனுடைய ஊர் மதகட்டூர் என்கிறது புராணம்.

பூங்கணை கொண்டு அம்பு தொடுக்க, அந்த அம்பு சிவனார் மீது பட்டு தவத்திலிருந்து கண்விழிக்க, கடும் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணால், மன்மதனை எரித்தார். தன் காதல் கணவன் மன்மதன் சிவபெருமானால் எரித்துக் கொல்லப்பட்டதை அறிந்த ரதிதேவி, துடித்துக் கலங்கினாள். ‘என் கணவனுக்கு உயிர் வழங்கி அருளுங்கள்’ என சிவபெருமானிடம் வேண்டினாள்.

‘மாசி மக நன்னாளில், அவன் உன் கண்ணுக்குத் தெரிவான்’ என அருளினார் சிவனார். திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் எமதர்மராஜாவும் கோயில் கொண்டிருக்கிறார். ஆண்டுதோறும் மாசி மக நன்னாளில், ரதி மன்மதனுக்கு விழா நடைபெறுகிறது இங்கே! அதேபோல், சிவ - பார்வதியும் இணைந்தார்கள் என்கிறது ஸ்தல புராணம்.

இங்கே சந்நிதி கொண்டிருக்கும் எமதர்மராஜாவை, சனிக்கிழமை எமகண்ட நேரத்திலும் ஞாயிற்றுக் கிழமை எமகண்ட நேரத்திலும் வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். தினமும் எமகண்ட வேளையில், எமதர்மராஜனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும்.

அதேபோல், திருமணம், சீமந்தம் முதலான வைபவங்கள் நடப்பதற்கு முன்னதாக அந்தப் பத்திரிகையை எமதர்மராஜனின் திருவடியில் வைத்துவிட்டு, விசேஷத்தைத் தொடங்குகின்றனர் பக்தர்கள்.

மேலும், எமதர்மராஜன் சந்நிதிக்கு எதிரில் சூலம் உள்ளது. எவரேனும் பணத்தையோ பொருளையோ வாங்கிக்கொண்டு ‘இல்லை, வாங்கவே இல்லை’ என்றாலோ அல்லது வாங்கிவிட்டு திருப்பித் தராமலிருந்தாலோ எமதர்மராஜன் சந்நிதியின் சூலத்தில், ஏமாற்றியவர்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி, கட்டிவைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனை ‘படி கட்டுதல்’ என்கிறார்கள். இப்படி ‘படி கட்டுதல்’ செய்து வேண்டிக்கொண்டால், விரைவில் நம்முடைய பணத்தையோ பொருளையோ அவர்கள் திரும்பத் தந்துவிடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதேபோல், ஆயுள் விருத்திக்காகவும் திருமணம் முதலான மங்கல காரியங்களில் தடை இருந்தாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். எம பயத்தையெல்லாம் போக்கி அருளுவார் எமதர்மராஜன் என்றும் வாழ்வில் சகல சந்தோஷங்களையும் தந்து அருளுவார் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

x