அம்மனின் சக்தி பீட வரிசையில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில் அர்த்தநாரி சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.
கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ள இக்கோயிலுக்கு உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. கர்நாடகாவில் உள்ள 7 முக்தி தலங்களில் (உடுப்பி, சுப்பிரமண்யா, கும்ப காசி, கோடேச்வரா, க்ரோட சங்கர நாராயணா, கோகர்ணம், கொல்லூர்) ஒன்றாக இத்தலம் கருதப்படுகிறது.
கொல்லூர் மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள இடம், புராண காலத்தில் பரசுராம முனிவரால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மூகாம்பாபுரி, கோலாபுரம், கொல்லூரு, கொல்லூர் என்று அழைக்கப்படும் இக்கோயிலின் மகிமை ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சுயம்புலிங்கத்தில் சக்கர வடிவத்தில் பரப்பிரம்ம சொரூபியான பராசக்தி, சகல தேவதைகளுடன் எழுந்தருளியுள்ளதாக சிவபெருமான் முருகப் பெருமானுக்கு விளக்குவதாகவும், அதைக் கேட்ட முருகப் பெருமான், அம்பிகையை வழிபடுவதற்காக இத்தலத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு
கிருதயுகத்தில் இத்தலத்துக்கு ‘மகாராண்யபுரம்’ என்று பெயர். சித்தர்கள், முனிவர்கள் பலர் இங்கு தவம் புரிந்து வந்துள்ளனர். கோல மகரிஷி என்ற முனிவர் இத்தலத்தில் அமர்ந்து தவம் புரிந்தபோது, அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான், வேண்டிய வரங்களை அளித்து, பராசக்தியை வேண்டும்படி பணித்தார், பராசக்தியை வழிபட்டு வரும்போது, காட்டின் நடுவில் சுயம்புலிங்கம் தோன்றியதைக் கண்டு நிர்குண சமாதியில் ஆழ்ந்தார்.
அப்போது காமாசுரன் என்ற அசுரன், பராசக்தியை வழிபட்டு பல வரங்களைப் பெற்று கோலாபுரியை தலைநகராகக் கொண்டு தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். நாளுக்கு நாள் அவனது கொடுமைகள் தாங்காமல் மக்கள் கவலையில் ஆழ்ந்தனர், கோல மகரிஷியுடன் தேவர்களும் பராசக்தியை நினைத்து தவம் இயற்றினர்.
இதை உணர்ந்த அசுரன், ரிஷ்யமுக பர்வதத்துக்குச் சென்று சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினான். சிவபெருமான் அசுரனுக்கு சாகா வரம் அளித்துவிட்டால், அவனது கொடுமைகள் இன்னும் அதிகமாகுமே என்று அஞ்சிய தேவர்கள், உடனே அபயம் அளிக்க பராசக்தியை வேண்டினர். அசுரனை வாய் பேசாத ஊமையாக (மூகாவாக) ஆக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அம்பிகையும் அசுரனை பேச முடியாமல் செய்துவிட்டார். அதனால் அவனுக்கு ‘மூகாசுரன்’ என்ற பெயர் வந்தது.
அதன் பிறகும் அவனது கொடுமைகள் தொடர்ந்தன. பராசக்தியும் அவனை வதம் செய்தார். உயிர் இறக்கும் தருவாயில், தன்னுடைய ஆணவத்துக்கு மன்னிப்பு கேட்ட அசுரன், பக்தர்களுக்கு வரம் அளிப்பதற்காக, அம்பிகை அங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். அதன்படி அம்பிகையும் மூகாம்பிகையாக கொல்லூரில் கோயில் கொண்டார். இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை, 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர் சங்கய்யா என்ற மன்னரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆதிசங்கரரும் மூகாம்பிகையும்...
சங்கர மடத்தை நிறுவிய ஆதிசங்கரர், மூகாம்பிகையின் தரிசனத்தைப் பெற்றதன் பலனாக, இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று வரலாறு தெரிவிக்கிறது.
ஒருசமயம், ஜோதிர்லிங்கம் முன்னர் அமர்ந்து, ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தார். கேரளாவில், காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு, கலைவாணிக்கு ஒரு கோயில் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அதனால், மைசூர் சாமுண்டீஸ்வரியை மனதில் தியானித்து, தனது கோரிக்கையை நிறைவேற்றும்படி வேண்டினார். ஆதிசங்கரருக்கு எதிரே அம்பிகை தோன்றி, அவ்வாறே வரம் அளிப்பதாகக் கூறி, “நீ, என்னை எங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறே அருள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ முன்னால் நடக்க, நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது. அவ்வாறு திரும்பிப் பார்த்தால், நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்” என்றார்.
ஆதிசங்கரரும் அதற்கு உடன்பட்டு, முன்னர் நடக்கத் தொடங்கினார். அம்பிகையின் கொலுசு ஒலி கேட்டபடி இருந்ததால், திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றார் ஆதிசங்கரர். வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்ததும் வணங்குவதற்காக அம்பிகை நின்றுவிட்டார். அப்போது, அம்பிகையின் கொலுசொலி ஆதிசங்கரருக்கு கேட்கவில்லை. அதனால் திரும்பிப் பார்க்கிறார். நிபந்தனைப்படி ஜோதிர்லிங்கத்தில் அம்பிகை அப்படியே ஐக்கியமாகிவிட்டார்.
அம்பிகை கோயில் கொண்ட இடம்தான் கொல்லூர் ஆகும். அடர்ந்த வனம், மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் ஜோதிர்லிங்கம் மட்டுமே இருந்தது. அதில் அரூபமாக முப்பெரும் தேவியர் உடனுறைவதாக ஐதீகம். ஆதிசங்கரர் தரிசித்தபோது, கோல மகரிஷி வழிபட்டு வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பிகை விக்கிரகம் ஏதும் இல்லை. அங்கேயே ஒரு மேடையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார் ஆதிசங்கரர். அம்பிகையின் உருவம் மனதில் ஒளிர்ந்ததை உணர்ந்தார்.
அரூபமாக இருக்கும் அம்பிகையின் பெருமைகளை உணர்ந்த மக்கள். அவரை தரிசிக்க முடியாததை நினைத்து வருந்தினர். ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரைக் கண்டு, தங்கள் மனக்குறையைக் கூற வேண்டும் என்று காத்திருந்தனர். எப்படியும் ஆதிசங்கரர் இதை உணர்ந்து, அம்பிகைக்கு விக்கிரகம் அமைப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆதிசங்கரரின் மனக்கண் முன்னர் சங்கு, சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்பிகை தோன்றினார். இத்தனை நாட்களாக தங்க ரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபமாக இருந்த முப்பெருந்தேவி மூகாம்பிகையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மூகாம்பிகையின் உருவம் மனதில் நன்றாக பதிந்ததால், உடனே கண்களைத் திறந்து பார்த்தார் ஆதிசங்கரர். தன் முன்னர் இருந்த மக்களும், அம்பிகைக்கு விக்கிரகம் அமைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியதால், உடனே, விக்கிரகக் கலையில் சிறந்து விளங்கிய விஸ்வகர்மா பரம்பரையைச் சேர்ந்த ஸ்தபதியை அழைத்து, மூகாம்பிகைக்கு விக்கிரகம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
மூலவர் விக்கிரகம் பஞ்சலோகத்தில் உருவானது, அம்பாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒரு வருடம் அமர்ந்திருந்து பூஜை செய்ததால், ஆதிசங்கரரால் எழ முடியவில்லை. தவிக்கும் பக்தரைப் பார்த்த அன்னை, தன் கையாலேயே கஷாயம் செய்து அவருக்கு அளித்தார். அதனாலேயே இன்றும் இத்தலத்தில், பக்தர்களுக்கு பிரசாதமாக கஷாயம் கொடுக்கப்படுகிறது.
தியானத்தில் தான் கண்ட உருவம், தற்போது தன் கண் முன்னர் இருப்பதைப் பார்த்த ஆதிசங்கரர் ஆனந்தம் அடைந்தார். சங்கு, சக்கரம் ஏந்திய படியும், அபய கரமாகவும், தன் மலர்ப்பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் நான்கு கரங்களுடன், சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவராக மூகாம்பிகை காட்சியளித்தார்.
சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளிவிட்டு மூகாம்பிகையின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், அதனடியில் ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரமும் அடக்கம். 64 கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார். அன்றைய தினம் முதல் கொல்லூரில் மூகாம்பிகை விக்கிரக ரூபத்துடன் அருள்பாலித்து வருகிறார். கோயிலில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து, ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியை எழுதி அரங்கேற்றி அருளியதாகக் கூறப்படுகிறது.
கோயில் சிறப்பு
மூகாம்பிகைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை கோயிலில் உள்ள 1,008 தீபங்கள் கொண்ட மகரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். பலிபீட பூஜையும் விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையும் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
கோயில் உள்பிரகாரத்தில் வலம்வரும்போது, வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பு உருவம் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதைக் தொட்டு வணங்கினால் ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. முதல் முறையாக கோயிலுக்கு வருபவர்கள், சௌபர்ணிகா ஆற்றில் நீராடும் சமயத்தில், அர்ச்சகர் கூறும் மந்திரங்களைக் கூறி நீராட வேண்டும். இதற்கு ‘ஸங்கல்ப ஸ்நானம்’ என்று பெயர்.
அம்பாளுக்கு தூய பட்டு புடவை, துளசி, பிச்சிப்பூ, தேன்பூ மாலை, அணிவித்து வழிபாடு செய்து, தங்க ரதத்தில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். தேவிக்கு செய்யப்படும் ஆராதனைகள் அனைத்தும் மூகனுக்கும் செய்யப்படும்.
ஸ்ரீ மூகாம்பாள் அஷ்டோத்திரம்
கொல்லூரில் மூகாம்பிகையாக விளங்கும் ஆதிசக்தியை ஸ்ரீ மூகாம்பாள் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சகல பலன்களையும் பெறலாம் என்பது ஐதீகம். துர்கா பரமேஸ்வரியாகவும், லலிதா மகா திரிபுரசுந்தரியாகவும் விளங்கும் அன்னை, கௌரி பஞ்சதஷாக்ஷரி மகா மந்திரத்தின் வடிவமாக விளங்குகிறார். கலைகளுக்கு அதிதேவதையாக மூகாம்பிகை கருதப்படுகிறார், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை அம்பாளுக்கு படைத்து கலாஞ்சலி செய்வது வழக்கம். அம்பாளை சீவேலி என்று கோயிலை திருவலம் செய்விக்கும்போது காலையில் காளி அம்சமாகவும், உச்சியில் திருமகளின் அம்சமாகவும், இரவில் கலைமகளின் அம்சமாகவும் வணங்குவது முறையாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க, இங்கே அம்பிகைக்கு ‘கலாரோகணம்’ என்ற துதி பாடப்படும்.
திருவிழாக்கள்
இங்கே, ஆனி மாதத்தில் அன்னையின் ஜெயந்தி, ஆடி மாதத்தில் மகாலட்சுமி ஆராதனை, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி விழா, மாசி மாதத்தில் தேர்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம், மூல நட்சத்திரத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப்படும். சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கன்னட வருடப் பிறப்பு, செவ்வாய், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு அம்பிகைக்கு சிறப்பு ஆராதனைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.