இன்று ஆடி பெளர்ணமி. இந்த நாளில் அம்பிகையைக் கொண்டாடுவோம். அம்பாளுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். நம் மனக்குழப்பங்களையெல்லாம் தீர்ப்பாள் அம்பிகை. மன வேதனைகளையெல்லாம் போக்குவாள் தேவி.
ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் விழாக்கள் விமரிசையாக நடந்தேறும். பொங்கல் படையலிடுவதும், கூழ் வார்த்து பக்தர்களுக்கு விநியோகிப்பதும் நடைபெறும்.
அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும் அப்பன் சிவனாரை விட, அம்பிகைக்கே இந்த மாதம் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். பொதுவாகவே செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அம்பாளுக்கு உரிய நாட்கள்.
அதிலும் ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பு வாய்ந்த நாட்கள்தான் என்ற போதும், இந்த நாட்களில் அம்மனை தரிசிப்பதும் அவளிடம் நம் மனக்குறைகளைச் சொல்லிப் பிரார்த்திப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆடி மாதத்தில் வருகிற பெளர்ணமி ரொம்பவே விசேஷமானது. சித்திரை மாதத்தில் வருகிற பெளர்ணமியின் போது, தேவி தரிசனம் பாபவிமோசனம் என்று சொல்லுவார்கள். அதேபோல், ஆடி மாத பெளர்ணமியில் அம்மனைத் தரிசிப்பதும் நம் பாவங்களையெல்லாம் போக்கும்; நாம் செய்த புண்ணியங்களுக்கான பலன்களைத் தந்தருளுவாள் தேவி என்பது ஐதீகம்.
ஆகஸ்ட் 11-ம் தேதி பெளர்ணமி. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பெளர்ணமி வருவது இன்னும் சிறப்புக்கு உரியது என்பார்கள். ஆடி மாத பெளர்ணமி நன்னாளில், காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களைத் தரும். இன்னல்களையெல்லாம் போக்கும்.
லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான அம்பாள் துதிகளைச் சொல்லியும் ஸ்லோகங்களைச் சொல்லியும் பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று தேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி, எலுமிச்சையில் தீபமேற்றி உங்களின் பிரார்த்தனைகளை சக்தியானவளிடம் சமர்ப்பியுங்கள். உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்துத்தருவாள் தேவி.
பெளர்ணமியில் முழு நிலவு வரும் வேளையில், வீட்டில் அம்பாளுக்கு விளக்கேற்றி, பாயசம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள் அம்பிகை.