ஹரியும் சிவனும் ஒன்னு; சேர்ந்தே இருக்கும் வில்வ துளசி மாலைகள்! -சங்கரன்கோவில் அற்புதம்


சிவனாரும் விஷ்ணுவும் வேறு வேறல்ல என்பதை சக்தியின் மூலமாக நமக்கெல்லாம் உணர்த்தும் ஒப்பற்ற திருவிழாதான் ஆடித்தபசு வைபவம்.

சங்கரன்கோவிலில் அமைந்திருக்கிறது சங்கரநாராயணர் கோயில். கோமதி அம்மன் கோயில் என்றால்தான் சட்டென்று பக்தர்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு அம்பாள் இங்கே வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.

நாக அரசர்களான சங்கன், சிவபெருமான் மீதும், பதுமன் என்பவன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற வாதம் எழுந்தது. ’சரி உமையவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்’ என்று பார்வதியிடம் தங்கள் வாதத்தை எடுத்துவைத்தனர்.

இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக பார்வதிதேவி, இருவரையும் நோக்கி கடும் தவம் புரிந்தாள். ‘நீங்கள் இருவரும் இணைந்து எனக்குத் திருக்காட்சி தந்தருள வேண்டும்’ என்றுதான் தவமிருந்தாள்.

இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மண்ணானது அப்படியே மூடிவிட்டது. நாகராஜாக்கள் புற்றுக்குள் இருந்தபடி வழிபட்டு வந்தனர்.

பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். இந்த விஷயம், பாண்டிய மன்னனுக்கு சென்றடைந்தது. அதன்பிறகு, லிங்கம் இருந்த இடத்தில் பிரம்மாண்டமாகக் கோயில் எழுப்பினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீகோமதி அம்பாளும் சக்தி மிக்கவள். கருணையே உருவெனக் கொண்டவள். உமையவள் இந்தத் தலத்துக்கு தவம் இருக்க வந்தபோது, அவளுடன் தேவலோக பெண்கள் பசுக்களாக அவளுடன் வந்தார்களாம். பசுக்களைக் கொண்டவள் என்பதற்காகவும் நிலவைப் போன்ற முகப்பொலிவு உடையவள் என்பதை உணர்த்தும் விதமாகவும் கோமதி எனும் திருநாமம் அன்னைக்கு அமைந்தது என ஸ்தல புராணம் விவரிக்கிறது.

திங்கட்கிழமைகளில் அம்பாளுக்கு மலர்ப் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். இங்கு அம்பாள் சந்நிதிக்கு எதிரே ஆக்ஞா சக்கரம் அமைந்துள்ளது. சக்கரக்குழி என்றும் சொல்வார்கள். இந்தச் சக்கரத்தின் மேல் அமர்ந்து அன்னையை தரிசித்து வேண்டிக்கொண்டால், மனநோய் தீரும்; மன அழுத்தத்தில் இருந்தும் குழப்பத்தில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.

அதேபோல், வன்மீகநாதராகவும் சிவனார் திகழ்கிறார். இங்கே உள்ள புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், சர்ப்ப தோஷங்களும் நீங்கும்; சகல தோஷங்களும் நீங்கும்; தீராத நோயும் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சந்நிதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கின்றன. பக்தர்கள் இவற்றுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்கு உரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறை, அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை என சிவனார் காட்சிதருகிறார். திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்கு உரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. சங்கரநாராயணருக்கு வில்வம், துளசி மாலைகளை அணிவித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமெளலீஸ்வரருக்குத்தான் அபிஷேகம் நடக்கிறது.

இன்று ஆடித்தபசு நன்னாளில் (ஆகஸ்ட் 10- ம் தேதி புதன்கிழமை) கோமதி அம்பாளையும் சைவமும் வைணவமும் ஒன்று உணர்த்திய சங்கர நாராயணரையும் மனதார வேண்டிக் கொள்வோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். மங்காத செல்வம் கிடைக்கப் பெறுவோம்!

x