பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர்!


தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது சிந்தாமணி நாத சுவாமி திருக்கோயில். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

சுமார் 800 வருட பழைமை வாய்ந்த திருத்தலம் இது. மூலவரே அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தரும் கோயில் என்பதால், இதை தென்மாவட்டத்தின் திருச்செங்கோடு என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.

இந்தத் தலத்தின் இன்னொரு விசேஷம்... புளியமரம். இதிலுள்ள புளியம்பழம் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருப்பதாகச் சொல்வர். இந்தக் கோயிலுக்கு வந்து, வேண்டிக்கொண்டால், பிரிந்த தம்பதி மீண்டும் சேருவார்கள் என்றும், கருத்து வேற்றுமை நீங்கும் என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது. கன்னியர், இந்தத் தலத்து சிவனாரை வேண்டிக்கொண்டால், நல்ல குணமுள்ள கணவன் கிடைக்கப்பெறுவார் என்பது ஐதீகம்.

பிருங்கி மகரிஷி, சிவம் வேறு சக்தி வேறு என்று நினைப்பவர். அதன்படியே சிவனாரை மட்டுமே வணங்குவார். இதனால் உமையவளுக்கு வருத்தம். சிவபெருமானிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் வருத்தம் கொண்ட பார்வதிதேவி, பூவுலகிற்கு வந்தாள். இந்தத் தலத்தில் உள்ள புளியமரத்தடியில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். அவரின் தவத்தை ஏற்றுக் கொண்ட சிவனார், தன் இடபாகத்தை உமையவளுக்குக் கொடுத்தது மட்டுமின்றி அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர், பாதி பகுதி உள்ள சிவபெருமானுக்கு கரங்களில் சூலம், கபாலம், காதில் தாடங்கமும் இருக்கிறது. காலில் தண்டை சதங்கம் உள்ளது. தலைமீது கங்கை உள்ளது. மீதமுள்ள பாகத்தில் அம்பாளின் கையில் பூச்செண்டு, அங்குசம், பாசம், காதில் தோடு உள்ளது. காலில் கொலுசு அணிந்திருக் கிறாள். இந்த அற்புதக் காட்சியை தரிசித்துச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

அர்த்தநாரீஸ்வரர்

ஒருசமயம், இந்தப் பகுதியை ஆண்டு வந்த ரவிவர்மன் என்ற மன்னனின் மகன் குலசேகரனுக்கு தீராத வயிற்று வலி. கடும் அவதிப்பட்டான். அப்போது சிவனடியார் ஒருவர், அர்த்தநாரீஸ்வரரிடம் வேண்டினால் நோய் அனைத்தும் தீரும் என்றார். அதேபோல் இங்கு வந்து சிவ தரிசனம் செய்ததுமே வயிற்று வலி தீர்ந்தது. இதில் மகிழ்ந்த மன்னன், கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

வருடத்தில், ஆனி மாதத்தில் இங்கு பிரம்மோத்ஸவம் நடைபெறும். பிருங்கி முனிவரின் விக்கிரகத் திருமேனியும் இங்கே உள்ளது. விழாவில், பிருங்கி முனிவர் சிவனாரை மட்டும் வழிபடுவது போலவும் இதில் உமையவள் கோபம் அடைந்து பிரிவது போலவும் பின்னர் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் காட்சி தருவது போலவும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வாசுதேவநல்லூர் சிவாலயம்

தலத்துக்கு அருகில் உள்ள கருப்பா நதியில் நீராடி, அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். கரு உண்டாகும் என்பதால், இதற்கு கருப்பை ஆறு என்று பெயர் இருந்ததாகவும் அதுவே மருவி கருப்பா ஆறு என்றானதாகவும் சொல்கின்றனர் பக்தர்கள்.

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரரை தரிசிப்போம்; மனமொத்த தம்பதியராய் வாழ்வோம்.

x