ஆடி வளர்பிறை அஷ்டமி; கவலை போக்கும் காலபைரவர் வழிபாடு!


பைரவர்

இன்று ஆகஸ்ட் 5-ம் தேதி ஆடி வளர்பிறை அஷ்டமி. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால், நம் துன்பங்களையெல்லாம் போக்குவார்.

திதிகளில் ஒவ்வொரு திதிக்கும் சிறப்பு உண்டு. ஏகாதசியும் துவாதசியும் பெருமாளுக்கு உகந்த திதிகளாகப் போற்றப்படுகின்றன. சதுர்த்தசி திதி விநாயக வழிபாட்டுக்கும் பஞ்சமி திதி வாராஹி வழிபாட்டுக்கும் உரிய நாட்களாகப் போற்றப்படுகின்றன.

இதேபோல், சஷ்டி திதி முருகக் கடவுளை வணங்கும் நாளாகவும் அஷ்டமி திதி பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகவும் போற்றப்படுகிறது. திரயோதசி திதி சிவ வழிபாட்டுக்கு உகந்த தினமாக, பிரதோஷ நாளாக வணங்கப்படுகிறது.

அஷ்டமியில் தேய்பிறை அஷ்டமி என்பதில் பைரவரை வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அனைத்து சிவாலயங்களிலும் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது நிறைவுப் பகுதியில் பைரவர் இருப்பார். இவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. மிளகு கலந்த சாதம், தயிர்சாதம் நைவேத்தியமாகப் படைப்பது மகத்துவம் மிக்கது.

வளர்பிறை அஷ்டமியிலும் பைரவ தரிசனம் செய்வது பலன்களைத் தரவல்லது. பல பெயர்களுடன் பைரவர் திகழ்வதாகச் சொல்கிறது சிவபுராணம். சிவ வழிபாட்டுடன் கூடிய இந்த பைரவ வழிபாடு, மிகுந்த வீரியம் கொண்டது என்றும் நம்மைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகளைப் போக்கி, நம்மை தீய சக்திகள் அண்டவிடாமல் பைரவர் காத்தருளுவார் என்றும் விவரிக்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

பைரவர்

ஆடி மாதத்தின் வளர்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்து, நம்முடைய வேண்டுதல்களை அவரிடம் வைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், இதுவரை நம் வாழ்வில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். தொழிலிலும் உத்தியோகத்திலும் மேன்மை அடையச் செய்வார் பைரவர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சில ஆலயங்களில், ராகுகால வேளையில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமையில் வளர்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசிப்போம். முடிந்தால், ராகுகால வேளையில் (காலை 10.30 முதல் 12 மணி வரை) செவ்வரளி மாலையை பைரவருக்கு சார்த்தி வேண்டிக்கொள்வோம். கவலைகளையெல்லாம் போக்கியருளுவார் காலபைரவர்.

x