பூமழை தூவி காவிரிக்கு மரியாதை; தனம் தானியம் தரும் ஆடிப்பெருக்கு வழிபாடு!


ஆடிப்பெருக்கு வழிபாடு

தமிழகத்தின் நதிகளில், காவிரிக்கு தனித்துவமும் முக்கியத்துவமும் உண்டு. பொதுவாகவே, நதிகளுக்கு பெண்களின் பெயர்களையே சூட்டிப் போற்றியிருக்கிறது புராணம். பெண்களைப் போல் தியாக குணமும் பாரபட்சமற்ற தயாள குணமும் கொண்டிருப்பதால் நதிகளுக்குக் காவிரி, கங்காதேவி, துங்கபத்ரா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை என பெண்களின் பெயரைச் சூட்டியதில் வியப்பு இல்லைதான். தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதியை, நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

ஆடிப்பெருக்கு பூஜை

‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்பார்கள். பழிப்பதற்கும் நகைப்பதற்கும் உரியதல்ல தண்ணீர். மாறாக, போற்றி வணங்கக்கூடியது. ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடு’ என்று அறிவுறுத்திய தேசத்தில், தண்ணீரின் உறைவிடமான நதியைக் கொண்டாடவும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான கொண்டாட்டம்... ஆடிப் பெருக்கு எனும் விழா! காவிரித் தாயைக் கொண்டாடி மகிழ்கிற வைபவம் இது!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்று சோழவளத்தையும் நாட்டின் சிறப்பையும் பெருமையுடன் சொல்வார்கள். அத்தனை செழிப்புக்கும் சிறப்புக்கும் காரணம்... காவிரி ஆறு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த சோழ தேசம் நன்றாக இருந்தால்தான், நன்றாக விளைந்தால்தான் மொத்த தமிழகமும் பஞ்சமில்லாமலும் பட்டினி இல்லாமலும் இருக்கும் என்று அன்றைய சரித்திரம் விவரிக்கிறது. அதற்கு அமோக விளைச்சல் தேவை. அந்த விளைச்சலைப் பெருக்கித் தருவதற்கு நீர் ஆதாரம் அவசியம். பசியுடன் அழும் கன்றுக்கு ஓடி வந்து பால் புகட்டுகிற பசுவின் வாஞ்சையுடன், காவிரித்தாய் கர்நாடகத்தில் இருந்து காடு மலையெல்லாம் கடந்து நடந்தும், ஓடியும், பாய்ந்தும் இங்கே தமிழகத்துக்கு வருகிறாள். அதனால்தான் ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று நதித் தாயைப் போற்றி வணங்கினார்கள்.

சோழ மன்னர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே ஆடிப்பெருக்கு நன்னாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. திருச்சியிலும் திருவையாறு பகுதியிலும் மன்னர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து பூக்களை நீரில் மிதக்கவிட்டும் விளக்குகளை ஒரு கூடையில் ஏற்றிவைத்தும் தானியங்களைத் தூவியும் காவிரிக்கு நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்வார்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் காவிரிக்கரைக்கு ஆடி மாதத்தின் 18-ம் நாளில், வந்து குவிந்துவிடுவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களை சாட்சியாகக் கொண்டு நடந்த திருமணத்தை அடுத்து ஆடி மாதத்தில் பெருக்கு நன்னாளில், காவிரித்தாயை சாட்சியாக வைத்துக்கொண்டு, படித்துறையில் தாலி பிரித்துப் போட்டுக்கொள்ளும் சடங்கு மன்னர்கள் காலந்தொட்டு இன்றுவரை நடந்து வரும், முக்கியமானதொரு சடங்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் அந்தக் காலத்தில் இதற்காகவே மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரம்மாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடிவிடுவார்கள். அதேபோல, தஞ்சாவூரில் உள்ள திருவையாறு பகுதி, காவிரியை வரவேற்க விழாக்கோலம் பூண்டிருக்கும். மக்கள், குடும்பம் குடும்பமாக வந்து காவிரி நீரில் மஞ்சள் தூவி, குங்குமம் தூவி, பூக்களை விட்டு, வணங்குவார்கள். கரையில், பொங்கல் படையலிட்டு, சித்ரான்னங்கள் செய்து காவிரிக்கு நைவேத்தியம் செய்து, உறவுகள் சூழ அமர்ந்து சாப்பிடுவார்கள்.

காவிரி நீராடல்

விவசாயம் செழிக்கவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்ட இந்த ஆடிப்பெருக்கு வைபவம், அடுத்து குடும்பம் செழிக்கும் விழாவாகவும் மலர்ந்தது. புதுமணத் தம்பதி, ஆடி மாதத்தில் பிரிந்திருப்பார்கள் அல்லவா... அப்போது மாப்பிள்ளையைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து, புத்தாடைகள் உடுத்தச் செய்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில், ஆடிப் பதினெட்டாம் நாளில், மஞ்சள் சரடு கட்டிக்கொள்ளும் வைபவம் நடைபெறத் துவங்கியது. ‘தாலி பிரித்துப் போடுதல்’ எனும் சடங்கு ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமானதொரு நிகழ்வு. ஆடி மாதம் பிரிந்திருக்கும் தம்பதி இதை சாக்காக வைத்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும், இந்தப் பிரிவு இன்னும் இன்னுமான அன்பை வலுப்படுத்துகிற வழிபாடாகவும் ஆனது எனத் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

இன்று ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு. காவிரித் தாயை வணங்கிப் பிரார்த்திப்போம். காடுகரையெல்லாம் செழிக்கட்டும். பூமியில் அமோக விளைச்சல் பெருகட்டும். ஒவ்வோர் இல்லத்திலும் தனமும் தானியமும் நிறைந்திருக்கட்டும்!

x