பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார் திட்டை குரு!


நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குரு என்று போற்றப்படும் பிரகஸ்பதி, தன் பக்தியாலும் கடும் தவத்தாலும் நவக்கிரகத்தில் ஒரு கிரகமாகவும் சுபக்கிரகமாகவும் வரத்தைப் பெற்றார். அவருக்கு சிவனார் அளித்த வரம் இது என்று போற்றுகின்றன புராணங்கள்.

ஒருவரின் வாழ்க்கையில், குருவின் கடாட்சம் மிக மிக அவசியம். குருவின் பார்வை இருந்தால்தான் வாழ்வில் அடுத்தடுத்த முன்னேற்றம் கிடைக்கும். பார்வதிதேவி, சிவனாரைத் திருமணம் புரிந்துகொள்ள விரும்பினார். ஆனால், நினைத்த மாத்திரத்தில் அது ஈடேறவில்லை. குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்பதை உணர்ந்த உமையவள், குருவை நோக்கி தவமிருந்தாள்; குருவின் அருளைப் பெற்றாள். பிறகு சிவபெருமானை கரம்பற்றினாள் என விவரிக்கிறது சிவபுராணம்.

தஞ்சாவூருக்கு அருகில் திட்டை எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். திட்டை திருத்தலத்தில் தான், உமையவள் குருவின் பேரருளைப் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் முதலான ரிஷிகளும் முனிவர்களும் தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம் இது.

இந்தத் தலத்தில், மிக முக்கியமானதொரு விசேஷம்... குரு பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகத்தில் உள்ள வியாழ பகவானையே, குரு பகவான் என்கிறோம். குருப்பெயர்ச்சி என்பதும் இவரின் நிகழ்வையொட்டியே நடைபெறுகிறது.

ராஜகுரு என்று போற்றப்படும் குரு பகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்ட தலம் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திட்டை. தென்குடித் திட்டை என்றும் சொல்லுவார்கள்.

திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய திருத்தலம் இது. காமதேனுப் பசு வழிபட்டு வரங்களைப் பெற்ற திருத்தலம் என்றும் ஜமதக்னி முனிவர் முதலானோர் தவமிருந்து பலன் பெற்றனர் என்றும் இந்தத் தலத்தைப் போற்றி சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.

பாடல் பெற்ற இந்த தென்குடி திட்டை குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமையன்று வருகிற குரு ஓரையிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

திட்டை குருபகவானை வணங்கி வழிபடுவோம். தீராத பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் வியாழ பகவான்!

x