ஆனி திருமஞ்சனம் : பக்தர்கள் கனசபை ஏற நடவடிக்கை எடுக்கவும்: முதல்வருக்கு கோரிக்கை!


ஜெமினி எம்என் ராதா

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சத்தையொட்டி பக்தர்கள் தடையின்றி கனசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்என் ராதா இன்று (ஜூலை.7) கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 11ம் தேதி தேர் திருவிழாவும், 12ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது. இதையொட்டி வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட பொது தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர்.

கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு உற்சவத்தின் போது பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனக சபையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உரிமை இல்லை என்று தீட்சிதர்கள் எப்படி கூற முடியும்? அதற்கு ஆகம விதிப்படி என்ன ஆதாரம் உள்ளது.

எனவே தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் தடையின்றி கனசபை மீது ஏறி தரிசனம் செய்யவும், சட்டம்,ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அறநிலையத் துறை சிறப்பு பணியாளர்கள், பாதுகாப்புடன் சிறப்பு பணி மேற்கொள்ளவும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மேலும் பக்தர்களின் நலன்கருதி வருகிற 12ம் தேதி நடக்கும் ஆனி திருமஞ்சன தரிசன விழா நேரத்தை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். இது தவிர பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிப்பறை, முதலுதவி அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல் கடலூர் மாவட்ட ஆட்சியர் கடலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர், கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாக ஜெமினி எம்என் ராதா தெரிவித்துள்ளார்.

x