காட்டுமன்னார்கோயில் வீரநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


கடலூர்: காட்டுமன்னார்கோயில் வீர நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

காட்டுமன்னார்கோயிலில் வீரநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இது நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் அவதரித்த ஸ்தலமாகும். இக்கோயிலில் கடந்த 4ஆம் தேதி நித்திய ஆராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. 5 ஆம் தேதி ஸ்ரீ வேத திவ்ய பிரபந்தங்கள் தொடக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை தொடங்கியது. அன்று மாலை இரண்டாம் கால யாகசாலை தொடங்கியது. தொடர்ந்து ஆறாம் தேதி அன்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இன்று (ஜூலை - 7) காலை 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கடங்கள் புறப்பட்டு ராஜகோபுரங்கள் மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்றத் தலைவர் கணேசன் மூர்த்தி, காட்டுமன்னார்கோயில் திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கோயில் தக்கார் வேல்விழி, கோயில் ஆய்வாளர் ஜெயசித்ரா, கோயில் செயல் அலுவலர் செல்வமணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காட்டுமன்னார்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தில் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே கல்வி நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. கோயில் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது.

x