சேலம்: பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் முக்கிய பண்டிகையான ஆடித்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை ஒட்டி கோட்டை பெரிய மாரியம்மன் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித்திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில், நடப்பாண்டு ஆடித் திருவிழா வரும் 23-ம் தேதி பூச்சாட்டுதலுடனும், மறுநாள் 24-ம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது..
இதனையொட்டி, இன்று காலை கோட்டை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், காலை 7.45 மணிக்கு தொடங்கி 8.45 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், கோயில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆடித்திருவிழாவில், கம்பம் நடுதல் வரும் 30-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு சக்தி அழைத்தல், மறுநாள் 6-ம் தேதி சக்தி கரகம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. ஆடித்திருவிழாவின் முக்கிய உற்சவமான பொங்கல் மற்றும் உருளுதண்டம் வழிபாடுகள், ஆகஸ்ட் 7, 8, 9 என 3 நாட்களுக்கு தொடந்து நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது சேலம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.
விழாவில், ஆகஸ்ட் 10-ம் தேதி கம்பத்தை கங்கையில் சேர்க்கும் (நீரில் விடுதல்) உற்சவம் நடைபெறுகிறது. மறுநாள் 11-ம் தேதி இரவு 8 மணிக்கு சப்தாபரணம் உற்சவம் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 10 மணியளவில், பெரிய மாரியம்மனுக்கு வசந்த உற்சவம் (மஞ்சள் நீராடுதல்) நடைபெறும். ஆகஸ்ட் 13-ம் தேதியன்று, காலை 10 மணிக்கு பால்குட விழா மற்றும் பெரிய மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.
திருப்பணிகள் காரணமாக, இக்கோயிலின் ஆடித்திருவிழா, கடந்த 8 ஆண்டுகளாக எளிமையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், வரக்கூடிய முதல் ஆடித்திருவிழாவாக இது அமைந்துள்ளதால், திருவிழா குறித்து பக்தர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.