சுசீந்திரம் கோயிலில் அவசர கதியில் திருப்பணிகள்!


நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கும்பாபிஷே கத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில் பாஜகவினர் மற்றும் பக்தர்கள் பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தாலும், தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் அதிக கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக, பல கோயில்களில் அவசர கதியில். தரமின்றி வேலைகள் செய்து கும்பாபிஷேகத்தை பெயரளவில் நடத்தி வருகின்றனர்

தாணுமாலய சுவாமி கோயில் மொட்டை மாடியில், தரை ஓடுகள் பதித்து 40 ஆண்டுகளாகின்றன. அங்குள்ள அனைத்து ஓடுகளுமே வெயிலில் பெயர்ந்து வெடிப்புகளுடன் காணப்படுகிறது.

ஆனால், 90 ஆயிரம் சதுர அடி கொண்ட கோயில் மொட்டை மாடியில் வெறும் 20 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே தரை ஓடுகள் பதிக்கின்றனர். எனவே, அனைத்து தரை ஓடுகளையும் மாற்றி புதிய ஓடுகள் பதிக்க வேண்டும். அனைத்து சன்னதிகளையும் ஆகம விதிப்படி சீரமைக்க வேண்டும். கோயில் கொடிமரம் சாய்ந்து நிற்கிறது. அதை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஏராளமான வேலைகள் கோயிலில் செய்ய்யப்பட வேண்டியுள்ளது. அனைத்தையும் சரி செய்த பிறகே கும்பாபிஷேகத்துக்கான தேதியைக் குறிக்க வேண்டும்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தியதைப் போல், சுசீந்திரம் கோயிலில் அதே போன்ற முயற்சியை எடுத்தால் மாவட்டம் தழுவிய போராட்டத்தை குமரி மாவட்ட அறநிலையத் துறை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x