ஆதிகேசவப் பெருமாள் கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களை வரவேற்கும் கிறிஸ்தவர்கள்!


ஆதிகேசவப் பெருமாள்

கன்னியா குமரி மாவட்டத்தில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்று கிறிஸ்தவர்கள் பதாகை வைத்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றத்தில், மாற்று மதத்தினர் கும்பாபிஷேகத்திற்கு வரக் கூடாது என தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இந்த பதாகை அமைந்துள்ளது.

திருவட்டாறில் பிரசித்திப்பெற்ற ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த ஆலயம் அமைந்திருக்கும் பத்மநாபபுரம் தொகுதியின் எம்எல்ஏ-வாக அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளார். கும்பாபிஷேக அழைப்பிதழில் இவரது பெயரைப் பார்த்ததும் இந்து அமைப்புகள் கோபமாகின. அமைச்சரைக் குறிவைத்தே பிரம்மபுரம் சோமன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில், ‘இந்துக்கள் அல்லாதோர் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கக் கூடாது’ என மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், திருவட்டாறு அருகில் உள்ள ஆற்றூர் பகுதியில் உள்ள புனித அந்திரியாஸ் ஆலயத்தின் பங்கு மக்கள் சார்பில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் பதாகை வைத்துள்ளனர். அதில், ஆதிகேசவப் பெருமாள் சயன நிலையில் படுத்திருக்கும் காட்சியோடு, கோயிலின் கருவறையில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

குமரி மாவட்டம், மதரீதியிலாக மிகவும் உணர்ச்சிபூர்வமான மாவட்டம். இங்கு சமூக நல்லிணக்கத்தின் சான்றாக 418 ஆண்டுகளுக்குப் பின்பு நடக்கும் கும்பாபிஷேக நிகழ்விற்கு அருகில் உள்ள தேவாலய பங்கு மக்கள் பதாகை வைத்து பக்தர்களை வரவேற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியூட்டியுள்ளது.

x