5 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் தரிசனத்தில் ஆயிரம் காளியம்மன்!


ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதுவும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆயிரம் காளியம்மன் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு காட்சி தருகிறார்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஆயிரங்காளியம்மன் கோயிலில் உள்ள ஆயிரம் காளியம்மனை பேழையில் வைத்து பூட்டப்பட்டிருப்பது வழக்கம். அந்த பேழை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு அம்மன் வெளியே எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

அதன்படி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 6-ம் தேதியன்று இரவு பேழையிலிருந்து அம்மனை எழுந்தருளச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இரவு முழுவதும் அம்மனுக்கு அலங்காரம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்மன் வெளியே எடுக்கப்பட்டு திருவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரம் மண் பானைகளில் பொங்கல் வைத்து கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நேற்று இரவு திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை ராஜசோளீஸ்வரர் கோயிலிலிருந்து ஆயிரங்காளியம்மன் கோயிலுக்கு வரிசை புறப்பாடு நடைபெற்றது.

ஆயிரங்காளியம்மன் என்பதால் பழங்கள், இனிப்பு வகைகள், காணிக்கை செலுத்தும் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான வரிசைப் பொருட்கள் ஒவ்வொன்றையும் ஆயிரம் எண்ணிக்கையில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை நான்கு மணி அளவில் அவை கோயிலுக்கு வந்தடைந்தன. அவற்றை அம்மன் முன்பு வைக்கப்பட்டு, திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டது.

இதற்காக இரவு முதலே காத்திருந்த பக்தர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடனும், பக்தியுடனும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என இரு வகையாக பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும்(ஜூன்8,9) மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியும்.

காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் தரிசனத்திற்கு பின்பு 10ம் தேதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் அம்மனுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு மீண்டும் பேழையில் வைத்துப் பூட்டப்படும்.

x