திருமண வரம் தரும் திருமணஞ்சேரி!


கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருமணஞ்சேரி. இந்தத் தலத்தின் இறைவனின் திருநாமம் உத்வாக சுவாமி. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோகிலாம்பாள்.

பசு உருவில் சாபமேற்று, சிவனாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என தவமிருந்த உமையவளின் சாபம் போக்கி, சிவபெருமான் உமையவளைக் கரம் பிடித்த திருத்தலம் இது.

உரிய வயது வந்தும் திருமணமாகாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து மனதார வேண்டிக்கொண்டால், விரைவிலேயே கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். அம்பாளுக்கும் சிவனாருக்கும் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டு பிரகார வலம் வந்து ஐந்து நெய்தீபங்களை ஏற்றிப் பிரார்த்தனை செய்யவேண்டும். இறைவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அர்ச்சகர் தருவார். அதை வீட்டுக்கு எடுத்து வந்து, பூஜையறையில் பத்திரமாக வைத்து தினமும் வணங்கிவரவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. அதேபோல, களத்திர தோஷம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆகவே, ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்னொரு விஷயம்... களத்திர தோஷம் பெண்ணுக்கு மட்டுமே பார்க்க வேண்டும். ஆண்களின் ஜாதகத்துக்குப் பார்க்கவேண்டியதில்லை.

எனவே, களத்திர தோஷத்தைப் பெரிதாகக் கருதாமல், திருமணஞ்சேரி திருத்தலத்துக்கு வந்து தரிசிப்பதும் பிரார்த்திப்பதுமே மிகச்சிறந்த பரிகாரம் என்று போற்றுகிறது திருமணஞ்சேரி ஸ்தல புராணம்.

x