மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜைக்கு வைகை ஆற்றிலிருந்து புனிதநீர் எடுப்பது கரோனா காலத்தில் தடைபட்டது. தற்போது 4 ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் புனித நீர் எடுத்து பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் காலையில் 5 மணிக்கு நடை திறந்த பின் 6.30 மணிக்கு காலசந்தி பூஜையும் விளா பூஜையும் நடைபெறும். இதற்காக தினமும் வைகை ஆற்றிலுள்ள கிணற்றிலிருந்து புனித நீர் (திருமஞ்சன நீர்) எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதற்காக வைகை ஆற்றிலுள்ள கிணற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனிதநீர் சுமந்து செல்ல, அதற்கு முன்னதாக கோயில் யானை, டங்கா மாடும், நாதஸ்வரக் கலைஞர்களால் மங்கள மேளம் முழங்க புனித நீர் எடுத்துச் செல்லப்படுவதும் வழக்கம்.
காலசந்தி பூஜையின் போது அம்மன், சுவாமியின் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும். கரோனா ஊரடங்கு காரணமாக 2020-ம் ஆண்டு முதல் வைகை ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது தடைபட்டது. யானைக்கல் தரைப் பாலத்தை ஒட்டி தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் தேங்கும் கழிவுநீரில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து கோயில் கிணறு இருக்கும் பகுதியும் கவனிப்பாரற்று கிடந்ததால் புனித நீர் எடுத்து செல்ல முடியவில்லை. இதனை அறிந்த பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துச் சென்று பூஜை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கிணறு இருக்கும் பகுதி சுத்தம் செய்து கிணறும் தூர்வாரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுக்குப்பின் இன்று முதல் மீண்டும் காலசந்தி பூஜைக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. அதனையொட்டி கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் சிவாச்சாரியார்கள் வைகை ஆற்றிலுள்ள கிணற்றில் இன்று காலையில் 6 மணியளவில் பூஜை செய்தனர். பின்னர் நாதஸ்வரம், மேளம் இசைக்க யானையும், டங்கா மாடும் முன்னே செல்ல புனிதநீர் நிரம்பிய வெள்ளிக்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து சென்றனர்.
பின்னர் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வாசல் வழியாக புனித நீர் கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. கரோனாவால் தடைபட்டு 4 ஆண்டுக்குப்பின் வைகை ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.