ஹஜ் பயணம் மேற்கொண்ட 326 பேர் சென்னை திரும்பினர்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு


சென்னை: புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 326 பேர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வரவேற்றார்.

சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 5,801 பேர் பயணம் மேற்கொண்டனர். ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த விமானத்தில் 170 பெண்கள் உட்பட 326 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், ஹஜ் பயணத்தை முடித்து கொண்டு 326 பயணிகளுடன் முதல் விமானம் சென்னைக்கு இன்று பிற்பகலில் வந்தது. புனித பயணத்தை முடித்துவிட்டு வந்தவர்களை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி நிர்வாகிகள், குடும்பத்தினர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது, "புனித ஹஜ் பயணத்துக்காக, தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,801 பேர் சென்றனர். இப்போது முதல் விமானத்தில் வந்துள்ள 326 பேரை வரவேற்கிறோம். புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மான்யம் வழங்கப்படுகிறது. புனித ஹஜ் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் இறந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மெக்காவில் இருந்து மதினாவுக்கு செல்லும் வழியில் நடந்த பேருந்து விபத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் வரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் கூறினார்.

x