கல்யாண வரம் தரும் குலதெய்வ வழிபாடு!


’கை நிறைய சம்பளம்; ஆனாலும் இன்னும் திருமண யோகம் கூடிவரலியே’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். திருமணத்தை நடத்தித் தராமல் தள்ளிப்போவதைத்தான் தோஷம் என்கிறது சாஸ்திரம். திருமண தோஷத்தை களத்திர தோஷம் என்கிறோம்.

திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

இந்த தோஷ அமைப்பைக் கொண்டவர்களுக்கு தாமதமாக திருமணம் நடைபெறும். அல்லது திருமணமே நடைபெறாத சூழலும் உண்டாகும். சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ நேரிடும் என்றும் இல்லற வாழ்க்கையில் நிம்மதியும் விட்டுக்கொடுத்தலும் இல்லாத நிலை ஏற்படும் என்றும் விவரிக்கிறார்கள்.

ஒருசிலருக்கு, களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடத்துக்கான அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

திருமணம் தள்ளிப்போகிறதே எனும் கவலையில் இருப்பவர்கள், மாதந்தோறும் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ரொம்பவே விசேஷம். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன், அங்கே நம்மாலான தூய்மைப் பணிகளில் ஈடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குலதெய்வக் கோயில் இருப்பதோ சொந்த ஊரில். நாங்கள் வேறொரு மாவட்டத்தில், வேறு மாநிலத்தில் இருக்கிறோம், என்ன செய்வது என்று கலங்கித் தவிப்பவர்கள், வீட்டுப் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, ஆத்மார்த்தமாக குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யலாம். மஞ்சள் துணிக்குள் பதினோரு ரூபாயும் குங்குமமும் வைத்து கட்டி, பூஜையறையில் உள்ள குலதெய்வத்தின் படத்துக்கு முன்னே வைத்து, அதற்கு பூக்களிட்டு வணங்கி வரலாம்.

குறிப்பாக, பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, குலதெய்வ வழிபாடு செய்வதும், இயலாதவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மாலான உதவிகள் செய்வதும் களத்திர தோஷத்தைப் போக்கும்; கல்யாண வரத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

x