சங்கடங்களையெல்லாம் தீர்த்தருளும் சஷ்டி நாயகனை வழிபடுவோம்!


வைகாசி மாதத்தின் வளர்பிறை சஷ்டியில் முருகக் கடவுளை வணங்குவோம். வருகிற 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி விரத நன்னாள்.

மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு ரொம்பவே சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் வளர்பிறை சஷ்டி ரொம்பவே விசேஷம். இந்தநாளில், முருகப்பெருமானைத் தரிசிப்பதும் பிரார்த்தனைகள் செய்வதும் மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

மேலும் சஷ்டி திதி நாளில், விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளைப் பக்தர்கள் வழிபடுவார்கள். காலையில் இருந்தே சாப்பிடாமல் மாலையில் விரதத்தை நிறைவு செய்து, முருக தரிசனம் செய்வார்கள். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், அருகில் உள்ள முருகப்பெருமானின் கோயிலுக்கோ அல்லது சிவாலயத்தில் அமைந்திருக்கும் சண்முகக் கடவுளின் சந்நிதிக்கோ சென்று வழிபட்டாலே போதும், நாம் நினைத்ததெல்லாம் நடந்தேறும் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

வருகிற 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி. வைகாசி மாதத்தின் சஷ்டி திதி. வளர்பிறை சஷ்டியும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு வாய்ந்தது என்பார்கள். வைகாசி விசாகம் என்பது முருக வழிபாட்டுக்கு உரிய உன்னதநாளாகப் போற்றப்படுவது போலவே, வைகாசி சஷ்டியும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வருகிற நாளும் முக்கியமான நன்னாளாகப் போற்றப்படுகிறது.

அந்தநாளில், வீட்டில் முருகப்பெருமானின் படத்துக்கு செந்நிற மலர்கள் அலங்கரித்து ஆராதிக்கலாம். செவ்வரளி ரொம்பவே விசேஷம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, கந்தகுமாரனை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிவேலன். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருளும் சஷ்டி நாயகனை வழிபடுவோம்.

x