வளர்பிறை பஞ்சமி: வேதனை தீர்க்கும் வாராஹி வழிபாடு


வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வழிபடுவோம். நம் வேதனைகளையெல்லாம் நீக்குவாள்; துக்கத்தையெல்லாம் போக்குவாள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுவிப்பாள் வாராஹி. சனிக்கிழமை (ஜூன் 4) வளர்பிறை பஞ்சமி.
வழிபாடுகளில், சக்தி வழிபாடு என்பது சாந்நித்தியமானது. கூடுதல் கவனத்துடனும் ஆத்மார்த்தமான சிந்தனையுடனும் செய்யக் கூடிய வழிபாடு என்பது ஐதீகம்.

தேவியை சக்தி என்று கொண்டாடுகிறது தேவி மகாத்மியம். பிரபஞ்ச சக்தியாகத் திகழ்பவள் தேவி. அதனால்தான், மகாசக்தி என்று அம்பிகையைக் கொண்டாடுகிறோம். சாக்த வழிபாடு என்று சொல்லப்படும் சக்தி வழிபாடு, முழுக்க முழுக்க பெண் தெய்வங்களை வணங்கி ஆராதிக்கிற வழிபாடு. அம்பிகையை அம்பாளாகவும் துர்கையாகவும் சூலினியாகவும் என பல ரூபங்களில் வழிபடுகிறோம். இத்தனை மகிமை மிக்க வடிவங்களில், சப்த மாதர்கள் என்றே தேவியைப் போற்றுகிறோம். சப்த மாதர்களில் உன்னதமானவாளாகத் திகழ்பவள் வாராஹி தேவி.

சப்தமாதர் வழிபாடு என்பது, சோழர்கள் காலத்தில் மிகுந்த வழிபாடுகளும் ஆராதனைகளும் கொண்டதாக இருந்திருக்கிறது என்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில், சப்தமாதர்களுக்கு சந்நிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில், சப்தமாதர்களில் வாராஹி வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறிப்பாக, புதிதாகக் கட்டப்பட்ட ஆலயங்களில் வாராஹி தேவிக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. அதேபோல், வாராஹி வழிபாட்டு மையங்களும் பக்தர்கள் குழுவாக இணைந்து ஆராதிக்கப்பட்டு வருகின்றன.

வாராஹி தேவியை பஞ்சமி திதியில் வழிபடுவது ரொம்பவே விசேஷம். அதிலும் வளர்பிறை பஞ்சமி திதி நாளில், வாராஹி தேவியை வழிபடுவது பன்மடங்குப் பலன்களைத் தரவல்லது என்று போற்றுகின்றனர் பக்தர்கள். அமாவாசைக்குப் பிறகு வருகிற ஐந்தாம் நாள் பஞ்சமி திதி. இதுவே வளர்பிறை பஞ்சமி. இந்தநாளில், வாராஹியை தரிசிப்பதும் அவளிடம் மனமுருகப் பிரார்த்திப்பதும் மனசஞ்சலங்களைப் போக்கும் என்றும் மனதின் தேவையற்ற குழப்பங்களையும் பயங்களையும் போக்கி, எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மைக் காத்தருளும் என்றும் சாக்த உபாஸகர்கள் சிலாகிக்கின்றனர்.

வருகிற 4.06.2022 சனிக்கிழமை, வளர்பிறை பஞ்சமி. இந்த நாளில், வாராஹியை வணங்குவோம். வீட்டில் விளக்கேற்றி, ’ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:’ என்கிற வாராஹி தேவியின் மூலமந்திரத்தை 108 முறை சொல்லி, நம் பிரார்த்தனைகளை முன்வைத்தால், நம் சங்கடங்களையெல்லாம் நீக்கி அருளுவாள் வாராஹி; வேதனைகளையெல்லாம் போக்கியருளுவாள் தேவி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

x