நடராஜர் கோயிலில் ஆய்வு - அறநிலையத் துறை அதிரடி


சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கோயில் நிர்வாகம் சட்ட விதிகளின்படி நடைபெறுகிறதா என அறநிலையத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில் அங்குள்ள பொது தீட்சிதர்கள் சபையினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோயில் நிர்வாகம் குறித்தும், வழிபாட்டு முறைகள் குறித்தும் அடிக்கடி பிரச்சினைகள் எழுவது வாடிக்கையாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு கோயிலில் தேவாரம் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை எதிர்த்து ஆறுமுகசாமி உள்ளிட்ட சிவனடியார்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தை அப்போதைய தமிழக அரசு எடுத்துக்கொண்டது. அவருக்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று கோயிலை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் தீட்சிதர்கள் எடுத்தனர்.

அதுபோல கடந்த இரண்டு வருடங்களாக நடராஜர் சன்னதி அமைந்துள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து கனகசபையில் பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நடராஜர் கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அறநிலையத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறை சார்பில் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபையினருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தீட்சிதர்கள் தரப்பில் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறநிலையத் துறை துறை கேட்டுக்கொண்டுள்ளது.

x